வாஷிங்டன்: இந்தியாவின் எதிர்காலம் முன்பை விட பிரகாசமாக உள்ளதாக அமெரிக்க எம்.பி. ஜான் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலும் பேசியதாவது: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டை இந்தியா கொண்டாடி வருகிறது. ஜனநாயகம் மற்றும் சுயராஜ்யத்துக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு கடந்த தசாப்தங்களில் அசைக்க முடியாதது.
அதனால் இந்தியாவின் எதிர்காலம் இன்று முன்பை விட பிரகாசமாக உள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட வலிமையான தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பை இந்திய ஜனநாயகம் வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டியுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு செழித்து வளர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், இந்திய மக்களை நமது நண்பர்களாக ஏற்றுக்கொண்டதில் பெருமிதம் கொள்கிறேன். சுயாட்சி, சுதந்திரம் மற்றும் வெளிநாட்டு ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் இருவரும் அங்கீகரிப்பவர்களாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.