சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 3-வது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அபார்ட்மென்ட்ஸ், வில்லாஸ், சீனியர் சிட்டிசன், கம்யூனிட்டி ஹோம்ஸ், ஹாலிடே ஹோம்ஸ், ஃபார்ம் ஹவுஸ் ஆகியவற்றை சிறப்புத் தள்ளுபடியுடன் வாங்கலாம்.
புதிதாக ப்ராபர்ட்டி வாங்குவதற்கும், சீரமைப்பு செய்வதற்குமான சிறப்புக் கடன் வசதி மற்றும் வேறு ப்ராபர்ட்டியில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இந்தக் கண்காட்சியை டிவி தொகுப்பாளரும், நடிகருமான ஆர்.ஜே.விஜய், சன் டிவி தொகுப்பாளினியும், நடிகையுமான பூஜிதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.
இந்தக் கண்காட்சி குறித்து ஆர்.ஜே.விஜய் கூறும்போது, “வீடு வாங்குபவர்களுக்கு, சிறியது முதல் பெரிய பட்ஜெட் வீடுகள் வரை தேர்வு செய்து வாங்குவதற்கான வாய்ப்பை இந்தக் கண்காட்சி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதுதவிர, வீடு வாங்குவோருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும், வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கு வசதிகளும் உள்ளன. இந்தக் கண்காட்சியைப் பார்த்தவுடன், எனக்கே சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது” என்றார்.
நடிகை பூஜிதா கூறும்போது, “கரோனா தொற்றுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் சந்தை வீழ்ச்சி அடையும் என பலர் கூறினர். ஆனால், ரியல் எஸ்டேட் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை இந்தக் கண்காட்சி உணர்த்துகிறது.
பெரிய பட்ஜெட் வீடுகள்தான் இக்கண்காட்சியில் இடம் பெறும் என்று நான் கருதியிருந்தேன். ஆனால், ரூ.12 லட்சம் மதிப்பிலான, சிறிய பட்ஜெட் வீடுகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இது ஏழை, நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றும்.
சென்னையில் இடமோ அல்லது வீடோ வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளது. இந்நிலையில், இந்தக் கண்காட்சியைப் பார்வையிடுவதன் மூலம், சென்னையில் சொந்தமாக வீடு, இடம் வாங்கலாம். அதற்கான அனைத்துத் தகவல்களும் ஒரே குடையின் கீழும், அப்டேட்டாகவும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.
இந்தக் கண்காட்சியில், ப்ரமோட்டர்கள், பில்டர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் 35 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.