இபிஎஸ் கூடாரம் விரைவில் காலியாகும்… ஓபிஎஸ் ஆதரவாளர் ஆருடம்!

எடப்பாடி பழனிச்சாமியின் டிரைவர் கூட எங்கள் அணிக்கு வருவது நிச்சயம் என்று அதிமுக ஓபிஎஸ் அணியின் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஓபிஎஸ் அணி சார்பில் புதிய மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக மற்றும் சார்பு அணி சார்பாக நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தவும் விதமாக பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு முன்னதாக திருப்பத்தூர் நகரில் உள்ள காந்தி சிலையில் இருந்து நடை பயணமாக அண்ணா சாலை வரை ஊர்வலம் சென்று அண்ணாவின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் கழக கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:

விஜயபாஸ்கர்,செல்லூர் ராஜு உட்பட அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எங்கள் அணிக்கு வருவார்கள் என நம்பிக்கை உள்ளது. அவர்கள் எல்லாம் எங்கள் அணிக்கு வர ஓர் காரணத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிட்டால் இபிஎஸ் பக்கம் இருக்கும் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு என அனைவரும் எங்கள் பக்கம் விரைவில் நிச்சயம் வருவார்கள். ஆர்பி உதயகுமார் கூட ஓபிஎஸ் அணியின் பக்கம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இபிஎஸ் முகாமில் இருப்பவர்கள் மனதில் இப்போதுதான் மாற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. புகைந்து கொண்டிருக்கும் எரிமலை ஒருநாள் நிச்சயம் வெடிக்கும் என்று நான் ரொம்ப நாட்களாக கூறி வருகிறேன். நான் சொல்லிவருவதை போல இபிஎஸ் முகாமில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் கொதித்தெழும் காலம் வெகுதொலைவில் இல்லை. காரணம் கட்சி இருந்தால்தான் தங்களுக்கு அரசியல் எதிர்காலம்… கட்சியே இல்லையென்றால் தங்களுக்கு அடையாளம் இல்லை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். எனவே இபிஎஸ் கூடாரம் விரைவில் காலி ஆவது உறுதி.

அதிமுகவில் தொடங்கி உள்ள தொண்டர்கள் புரட்சி, எடப்பாடி பழனிச்சாமி அணியை நிச்சயம் வீழ்த்தும். ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் நேர்மையான கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். கூடிய விரைவில் பணத்திற்கு தலையாட்டாத நேர்மையான நிர்வாகிகளுடைய பொதுக்குழுகூட்டம் நடைபெறும்.

அவரது குடும்பத்தினரே விரும்பாததொரு அரசியலைதான் இபிஎஸ் செய்து கொண்டிருக்கிறார். இனியும் அது எடுப்படாது என்று மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியே சொன்னால், ஓபிஎஸ் உடன் இனி நாங்கள் சேரமாட்டோம் என்று இபிஎஸ் ஆதரவாளரான ஆதி ராஜாராம் திட்டவட்டமாக கூறியிருக்கும் நிலையில், இபிஎஸ் கூடாரம் விரைவில் காலியாகும் என்று அழகு மருதுராஜ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.