சென்னை திருவொற்றியூரில் தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் நாம் தமிழர் மருத்துவ பாசறை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் மற்றும் குருதிக்கொடை முகாமை நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோகுல் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துவக்கி வைத்தார். இதற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், வாரிசு திரைப்படம் தடுப்பது உதயநிதி ஸ்டாலின் தான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி கூறியதை மறுத்த சீமான், தம்பி உதயநிதி அப்படிப்பட்ட ஆள் இல்லை என தெரிவித்தார்.
மேலும் திரைப்படம் தெலுங்கில் வெளியாக விட்டால் களத்தில் இறங்கி போராட தான் செய்வோம் என அறிவித்தார். கட்சிகள் மாறினாலும் மாற்றங்கள் ஏதுமின்றி ஊழல் லஞ்சம் விலையேற்றம் போன்ற அதே அவல நிலைதான் தொடர்கிறது எனவும் இனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பேசினார். இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயற்குழு புதன்கிழமை கூடுகிறது. அதில், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு பற்றி ஆலோசிக்க இருப்பதாகவும் அவர்கள் முடிவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கு படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்த நிலையில், வாரிசு படத்துக்கு சிக்கல் எழுந்திருக்கும் சூழலில் பனையூரில் விஜய் இன்று தனது மன்ற நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யவே இந்தச் சந்திப்பு என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்துக்கு படம் ஏதாவது ஒரு சிக்கல் வந்துகொண்டே இருக்கிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக விஜய் சில முடிவுகளை விரைவில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான அச்சாரமாகவும், அதுகுறித்து ஆலோசிக்கும் விதமாகவும் இன்று இந்த சந்திப்பு இருக்குமெனவும் தகவல் வெளியாகிறது.