வேலூர் மாவட்டத்தில் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
“பத்து சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கின்ற ஒரு செயல். உயர் வகுப்பில் பின்தங்கிய சமூகமாக இருக்கிற ஏழைகளுக்கு இலவச கல்வி, கல்வி கடனுதவி, தொழில் தொடங்க கடன் உதவி போன்றவற்றை அரசு உதவியாக செய்ய வேண்டுமே தவிர இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். நாட்டில், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அந்த மாநில அரசுகளை மதிக்காமல் அரசியல் பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்க ஒன்று.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில், பாஜகவுக்கு மக்களிடையே சிறிதளவு கூட வரவேற்பு இல்லை. சமூக ஊடகங்கள் மட்டும் தான் பாஜகவை தாங்கி பிடிக்கின்றன. சமீபத்தில், பாஜகவை பார்த்து திமுக அரசு பயப்படுகிறது என்ற எடப்பாடி பழனிசாமியின் கூற்றை, பாஜகவின் குரலாக பார்க்க வேண்டும்.
அவர் அதிமுகவை கரைய விட்டது மட்டுமல்லாமல், காய் கழுவவும் விட்டுள்ளார். தற்போது, எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க. நிர்வாகி போல் செயல்படுகிறார்” என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.