ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டிய இரு அறிக்கைகள்…

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதை அடுத்து அரசாங்க நிதி பற்றிய குழுவினால் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவேண்டிய இரு அறிக்கைகள் தொடர்பில் அக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அரசங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி. சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் அன்மையில் (15) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நிலையியற் கட்டளை 121க்கு அமைய ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டதை அடுத்து அரசாங்க நிதி ஒதுக்கீடு அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணங்கியுள்ளதா என்பதை உள்ளடக்கிய மதிப்பீட்டு அறிக்கை மற்றும் வரவுசெலவுத்திட்ட குழுநிலை அமர்வு ஆரம்பிக்க முன்னர், மொத்த மதிப்பிடப்பட்ட செலவினத்தையும் அரசிறையையும் கணக்கிடுவதற்கான அடிப்படையாக பயன்படுத்தப்பட்ட அரசிறை, நிதிசார் மற்றும் பொருளாதார ஊகங்களின் மீதான அறிக்கை என்பவற்றை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதற்கமைய, இந்த இரு அறிக்கைகளையும் தயாரித்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அந்த இரு அறிக்கைகளையும் தயாரிப்பது தொடர்பில் செயற்படும் கலாநிதி துஷ்னி வீரகோன், கலாநிதி நிஷா அருணதிலக்க மற்றும் கலாநிதி யுதிகா இந்திரரத்ன ஆகியோரின் கருத்துக்களும் இதன்போது பெறப்பட்டன.

இந்த இரு அறிக்கைகளினதும் வரைபுகளை தயாரித்ததை அடுத்து குழுவின் உறுப்பினர்களின் கருத்துக்களையும் சேர்த்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக குழுவின் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி. சில்வா குறிப்பிட்டார்.

அதேபோன்று, தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் 2023 ஆம் ஆண்டுக்காகத் தயாரிக்கப்படும் வருடாந்த வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது கருத்தில் கொள்ளப்பட்டது. மேலும், இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் முன்வைத்த விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ ஹர்ஷண ராஜகருனா, கௌரவ சஹன் பிரதீப், கௌரவ மதுர விதானகே, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.