கள்ளக்காதலியின் மகள் கொலை; மும்பையில் குற்றவாளி கைது
பூந்தமல்லி: சென்னை புறநகரான, பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் அம்சவள்ளி, 35. கணவரை பிரிந்து, தன் மகள் சங்கீதா, 18, உடன் தனியாக வசித்து வந்தார்.
இவருக்கு, ராஜு, 38, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. சங்கீதாவுக்கு, அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த வாரம், வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை, கழுத்தை நெரித்து ராஜு கொலை செய்து மாயமானார். பிரேத பரிசோதனையில், சங்கீதா கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் தனிப்படை போலீசார், மும்பையில் பதுங்கியிருந்த ராஜுவை, நேற்று கைது செய்தனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த ராஜு, ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்து, அம்சவள்ளியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
மும்பையில் பல குற்றங்களில் தொடர்புடைய ராஜு, சம்பவ நாளன்று சென்னீர்குப்பம் வீட்டிற்கு வந்தபோது, தன் ஆசைக்கு இணங்குமாறு சங்கீதாவை வற்புறுத்தியுள்ளார்.
அவர் மறுத்ததால், கழுத்தை நெரித்து கொலை செய்து, சங்கீதாவை கற்பழித்துள்ளார். நகைக்காக கொலை நடந்தது போல இருக்க வேண்டும் என்பதற்காக, நகைகளை திருடி மும்பைக்கு சென்றுள்ளார். வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரிக்கப்படுகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
நகை திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் கைது
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரில் கடந்த ஜூலை 2ல் மர்ம நபர்கள் அப்பகுதியைச் சேர்ந்த காத்தூன்பீவி 60, அணிந்திருந்த 11 பவுன் செயினையும், அதே போன்று ஆக.30 ஆனந்தூர்அருகே ராதானூர் விருதன்வயல் பகுதியை சேர்ந்த ராமு 55, அவரிடம் 11 பவுன் தாலி செயினையும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார்விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நகை பறிப்பில் ஈடுபட்ட பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் 33, செல்லமுத்து 24, ஆகிய இரு வாலிபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரிக்கின்றனர்.
15 வயது மகனுக்கு பைக் தந்தைக்கு ரூ.20,000 அபராதம்
தட்சிண கன்னடா : சிறு வயது மகனுக்கு, பைக் கொடுத்து விபத்துக்கு காரணமான தந்தைக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, புத்துார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தட்சிண கன்னடா, புத்துாரை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். இவர் 2020ல், தன் ௧௫ வயது மகனுக்கு, பைக் கொடுத்திருந்தார். சிறுவன் பைக்கை ஓட்டி சென்று, விபத்தை ஏற்படுத்தினார்.
இது குறித்து, கடபா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. விசாரணை நடத்தி, புத்துார் நீதிமன்றத்தில் அறிக்கைதாக்கல் செய்தனர்.
விசாரணை நடத்திய நீதிபதி யோகேந்திர ஷெட்டி, சிறுவன் தந்தை அப்துல் ரஹ்மானுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உத்தரவிட்டார்.
காதலியை துண்டாக வெட்டியவருக்கு நாளை உண்மை கண்டறியும் சோதனை?
புதுடில்லி : காதலியை கொலை செய்து, ௩௫ துண்டுகளாக்கி வெவ்வேறு இடங்களில் வீசிய அப்தாப் அமீன் புனேவாலுக்கு, புதுடில்லி மருத்துவமனையில் நாளை, ‘நார்கோ அனாலிசிஸ்’ எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் அமீன் புனேவால் மற்றும் ஷ்ரத்தா வால்கர், ஒன்றாக பணியாற்றி வந்தனர்.
இருவரும் காதலித்து வந்ததற்கு, ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, இருவரும் புதுடில்லிக்கு சென்று தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், நீண்ட காலம் தொடர்பு கொள்ள முடியாததால், ஷ்ரத்தாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணையின்போது, கடந்த மே மாதம், ௧௮ம் தேதியே ஷ்ரத்தா கொல்லப்பட்டது தெரிய வந்தது.
அவருடைய உடலை, ௩௫ துண்டுகளாக்கி, அதை புதுடில்லியின் பல்வேறு இடங்களில் அப்தாப் வீசியுள்ளதும் தெரியவந்தது.
இந்தக் கொடூர சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அப்தாபுக்கு, நார்கோ அனாலிசிஸ் சோதனை செய்வதற்கு, புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அவருடைய போலீஸ் காவல், ௨௨ம் தேதியுடன் முடிகிறது. இதனால், அதற்கு முன் நாளையே இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ரோஹிணியில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் இந்தப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இது குறித்து எந்தத் தகவலும் வரவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பரிசோதனை செய்வதற்கு முன், அப்தாபின் உடல்நிலை, மனநிலை உள்ளிட்டவை குறித்த பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதனால், போலீசார் திட்டமிட்டபடி, நாளை இந்தப் பரிசோதனை நடக்குமா என்பது சந்தேகமே என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, அப்தாப் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானதாக, சில ‘வீடியோ’க்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இதில், இருட்டில் ஒருவர் தோள்பட்டையில் ஒரு பையுடன் செல்வது போன்ற காட்சி உள்ளது.
இது, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை வீசுவதற்காக, அப்தாப் பையுடன் செல்லும் காட்சியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதை போலீசார் உறுதி செய்யவில்லை.
பூக்கடையில் அண்ணன் மகனை குத்தியவர் கைது
பூக்கடை : சென்னை, பூக்கடை, ரத்தன் பஜார் நடைபாதையில் வசிப்பவர் அன்பு, 52; ஆட்டோ ஓட்டுனர். இவரது அண்ணன் மகன் பாலாஜி, 38. இவரும் அதே பகுதியில் வசிக்கிறார். நேற்று, அன்புவின் ஆட்டோவில் அமர்ந்து பாலாஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அங்கு போதையில் வந்த அன்பு, பாலாஜி தட்டில் இருந்த சிக்கன் பீசை எடுத்து சாப்பிட்டார்.
ஆத்திரமடைந்த பாலாஜி, ‘காசு கொடுத்து வாங்கி சாப்பிட மாட்டியா; ஓசி சிக்கன் கேட்குதா…’ எனக் கேட்டார். இதைத்தொடர்ந்து இருவரிடையே தகராறு முற்றியது.
இதில், கத்தியால் பாலாஜியை குத்திவிட்டு அன்பு தப்பினார். படுகாயமடைந்த பாலாஜியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரித்த பூக்கடை போலீசார், அன்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
8 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கொலை குற்றவாளி
மீஞ்சூர், : கடந்த 2014ல், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த லிட்டன்குமார் தினேஷ்பாய் பிஸ்வாஸ், 42, மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபுலா மெகந்தி, 50, ஆகிய இருவரும், காட்டுப்பள்ளி ‘எல் அண்டு டி’ கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இருவரும், மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு, காமராஜர் நகரில், வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, வேலை பார்த்து வந்தனர்.
![]() |
இந்நிலையில், 2014ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் தேதி, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், லிட்டன்குமார் தினேஷ்பாய் பிஸ்வாஸை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு, பாபுலா மெகந்தி தப்பினார். மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து, கொலை குற்றவாளி பாபுலா மெகந்தியை தேடி வந்தனர்.
எட்டு ஆண்டுகளாக பாபுலா மெகந்தி, கைது செய்யப்படாமல் இருந்ததை தொடர்ந்து, ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்படி, மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள், ஒடிசா மாநிலம் சென்று, கடந்த 17ம் தேதி, குணசாகர கிராமத்தில் பதுங்கியிருந்த, பாபுலா மெகந்தியை கைது செய்தனர்.
அவரை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
எட்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை ஆவடி கமிஷனர் பாராட்டியுள்ளார்.
வாலிபரிடம் வழிப்பறி இருவர் சிறையிலடைப்பு
திருப்பூர் : திருப்பூர், முத்தணம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், 32; பனியன் தொழிலாளி. இடுவம்பாளையத்தில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த, இருவர் திடீரென சுரேசை வழிமறித்தனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய, இருவர் மொபைல் போன், பணத்தை பறிமுதல் செய்து தப்பி சென்றனர்.
வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். வழிப்பறி தொடர்பாக, இருவரை பிடித்தனர். விசாரணையில், தேனியை சேர்ந்த சந்தோஷ், 19, மதுரையை சேர்ந்த சந்தன கருப்பு, 20 என்பது தெரியவந்தது. இருவரும் சுல்தான்பேட்டையில் வேலை செய்து வந்தனர். ரோட்டில் தனியாக வரும் நபர்களிடம் கைவரிசை காட்டி விட்டு, சொந்த ஊருக்கு தப்பி சென்று விட்டு, சில மாதம் கழித்து மீண்டும் திருப்பூருக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
குழந்தைகளுடன் வீட்டை எரித்த கணவர் அட்டகாசம்
ஹாசன் : குழந்தைகளை பார்க்க விடவில்லை என்பதால், கோபமடைந்த கணவர், மனைவி, குழந்தைகளை வீட்டில் வைத்து எரித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், ஹாசன் அங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி, 35. இவரது மனைவி கீதா, 30. இத்தம்பதிக்கு சிரந்தன், 7, நந்தன், 5, என்ற மகன்கள் உள்ளனர்.
குடும்ப பிரச்னையால், தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டதால், பிரிந்து தனித்தனி வீட்டில் வசிக்கின்றனர். குழந்தைகள் தாயிடம் உள்ளனர். ரங்கசாமி அவ்வப்போது சென்று பார்த்து வருவார். நேற்று முன் தினமும், மகன்களை பார்க்க வந்திருந்தார். ஆனால் பார்க்க விடாமல், மனைவி தடுத்தார்.
கோபமடைந்த கணவர், நேற்று அதிகாலை வீட்டுக்கு தீ வைத்தார். இதில் மனைவியும், இரண்டு மகன்களும் தீக்காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஹாசன் போலீசார், ரங்கசாமியை கைது செய்தனர்.
பெண் இன்ஸ்., மகன் துாக்கிட்டு தற்கொலை
ஓட்டேரி : சென்னை, பட்டாளம், காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சுகுணா,38. இவர் பொருளாதார குற்றப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு 7:30 மணியளவில் இவர்களது ௧௭ வயது மூத்த மகன், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலின்படி ஓட்டேரி போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்