ஆமதாபாத்: குஜராத்தில் அனைத்து ஓட்டுப்பதிவு சாவடிகளிலும் பா.ஜ., வின் வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசினார்.
குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, வரும் டிசம்பர் 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பாஜ., தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கும் வகையில் காங்., கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆம் ஆத்மி 3வது அணியாக தேர்தல் களத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் குஜராத் சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 6-ந்தேதி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். மேலும் வல்சாத் மாவட்டம் கபர்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
மோடி 2-வது முறையாக குஜராத்தில் பிரசாரம் மேற்கொள்ள, 3 நாட்கள் பயணமாக அவர் நேற்று இரவு குஜராத் சென்றார். பிரதமர் மோடி இன்று காலை புகழ் பெற்ற சோம்நாத் கோவிலில் பூஜையில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்த பிறகு பிரசாரத்தை துவக்கினார்.

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் ஜூவா சராபத்தில் இன்று(நவ.,20) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஓட்டுப்பதிவு நாளில் மக்கள் அதிக அளவில் சென்று ஓட்டு போட வேண்டும். முந்தைய ஓட்டுப்பதிவு எண்ணிக்கையின் சாதனையை முறியடிக்க வேண்டும்.

குஜராத்தில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பா.ஜ., வின் வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் அதை எனக்காக செய்வீர்களா?. இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி 3 நாள் பிரசாரத்தில் சுரேந்திரா நகர், பரூச், நவ்சாரி பகுதி உள்ளிட்ட 7 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இதில் மொத்தம் 1.50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement