சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக, முன்னாள் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இரு அணிகளாக இந்திரா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தியதுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசியச் செயலர் ஸ்ரீவல்ல பிரசாத், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அழகிரியை, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸார் முற்றுகையிட்டு, திருநெல்வேலி மாவட்டத் தலைவர் கேபிகேஜெயக்குமாரை மாற்றக் கோரி கோஷம் எழுப்பினர்.
கூட்டம் முடிந்து அழகிரி புறப்பட்டபோதும், அவரது காரை முற்றுகையிட்டனர். அப்போது, அழகிரிஆதரவாளரும், மாநில எஸ்.சி.அணி தலைவருமான ரஞ்சன் குமார் தரப்பினர், வாகனத்தை முற்றுகையிட்ட காங்கிரஸாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன்தான் காரணம் என்று கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 62 மாவட்டத் தலைவர்கள் கையெழுத்திட்டு, தினேஷ் குண்டுராவிடம் கடிதம் அளித்தனர்.
விசாரிக்க வலியுறுத்தல்: அக்கடிதம் தொடர்பாக விவாதம் நடைபெற்றபோதே, முன்னாள்தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர், ‘‘தங்கள் கோரிக்கையை சொல்ல வந்தவர்களை தாக்கியது நியாயம் இல்லை. அதுகுறித்து விசாரிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.
விளக்கம் அளிக்க நோட்டீஸ்: இந்நிலையில், வரும் 24-ம்தேதி நடைபெறும் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் ரூபிமனோகரன், ரஞ்சன் குமார் ஆகியோர் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. முதலில் அழகிரி மற்றும்அவரது ஆதரவாளர்களும் மரியாதை செலுத்தினர். அவருடன் செல்வதை தவிர்த்த முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனியாக சென்று மரியாதை செலுத்தினர்.
கார்கேவை சந்திக்க முடிவு: மேலும், சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியையும் அவர்கள் புறக்கணித்தனர். மேலும், தனியார் ஓட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதில், கட்சி நிர்வாகிகளையே குண்டர்களை வைத்து தாக்கிய அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துமனு அளிப்பது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக காங்கிரஸில் கோஷ்டி மோதல் இல்லாத நிலையில், தற்போது கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது, ‘‘நிகழ்ச்சிக்கு வர சற்று தாமதம் ஆகிவிட்டது. அழகிரியுடன்பங்கேற்கக் கூடாது என்று கருதவில்லை. கட்சியில் கோஷ்டி பூசலும்இல்லை, மோதலும் இல்லை’’ என்றார். தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.