கோவை மாவட்டத்தில் ஆசிரியை திட்டியதால் 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராஜா மில் ரோட்டை சேர்ந்தவர் மைசூர் ரகுமான். இவரது மகள் அம்ரிஷா பானு(16) பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு தனது அம்மாவின் கடைக்கு சென்று, அவரிடம் வீட்டு சாவியை வாங்கி விட்டு அம்ரிஷா பானு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த அம்ரிஷா பானு தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து இரவு அம்ரிஷா பானுவின் மாமா சதாம் உசேன் உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை தட்டியுள்ளார் அப்பொழுது யாரும் கதவை திறக்காததால், அவர் தனது மனைவியுடன் சேர்ந்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் அம்ரிஷா பானு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து அம்ரிஷா பானுவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது பள்ளியின் இயற்பியல் ஆசிரியை மற்ற மாணவிகள் மத்தியில் திட்டியதால் வேதனையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.