ரோத்தக்: ஹரியாணாவில் கடந்த ஜூன் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ரோத்தக் மாவட்டம், சிரி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தரம்பால் என்பவர் போட்டியிட்டார். இவர் 66 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தரம்பாலுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். கிராம மக்களால் அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரம்பாலை கவுரவிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் பிரம்மாண்ட விழாவை நடத்தினர். அப்போது கிராம மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.2.11 கோடி ரொக்கம் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ சொகுசு கார் பரிசாக அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சிரி கிராமத்தை சேர்ந்த பலராம் கூறும்போது, “கிராம மக்கள் தரம்பாலுடன் உள்ளோம் என்பதை நிரூபிக்க பிரம்மாண்ட விழாவை நடத்தி ரொக்கப் பரிசு, சொகுசு காரை அவருக்கு பரிசாக வழங்கினோம். அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார்” என்றார்.
தரம்பால் கூறும்போது, “எனது கிராம மக்களின் அன்பால் நெகிழ்ச்சி அடைந்துள்ளேன். இவர்கள் அனைவரும் எனது அண்ணன், தம்பிகள். அவர்களின் நலனுக்காக தொடர்ந்து உழைப்பேன்” என்றார்.