நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மழைதான் – மு.க. ஸ்டாலின்

சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கீதாபவன் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் 54 மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திருமணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திவைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருமணம் நடத்தி வைத்த பிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “உங்களால் உருவாக்கப்பட்டிருக்க கூடிய அந்த உயர்ந்த பொறுப்பில் உங்களால் உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்து படித்து ஆளாகி உயர்ந்த பகுதி இந்த ஆயிரம் விளக்கு பகுதி. அதில் குறிப்பாக இந்த கோபாலபுரம் பகுதிதான். நான் மட்டுமா? நமது தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து நம்மை ஆளாக்கிய கருணாநிதியும் வாழ்ந்த பகுதி இந்த கோபாலபுரம் பகுதிதான். ஆக அவர் கோலோச்சிய இடம் இந்த கோபாலபுரம். கோபாலபுரம் என்பது தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் இன்னும் சொன்னால் இந்திய துணைக் கண்டத்துக்கே ஒரு தலையாய இடமாக மறக்க முடியாத இடமாக விளங்கி கொண்டிருக்கிறது.

கோபாலபுரத்துக்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ குடியரசு தலைவர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ வெளிநாட்டு தலைவர்கள் வந்திருக்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புக்குரிய பகுதியில் உங்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. இதைவிட பெருமை உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தபோது கொரோனாவில் இருந்து மீண்டு வந்தோம். 1996-ல் நான் சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அடுத்த நாளே மழை வந்தது. 20 நாட்களுக்கு மழை பெய்ததால் சென்னை முழுவதும் மழை பாதித்த பகுதிகளை சீர்படுத்தினோம். 

மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம், 80 சதவீதம் முடித்துள்ளோம். இன்னும் மிச்சம் இருக்கிற பணிகளையும் செய்து முடிப்போம். எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை முழுமையாக செய்து முடிப்போம். கலைஞர் அப்போது கூறும்போது நீ மேயராக வந்தது முதல் மழைதான் என்றார். அதேபோல் இப்போது நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அதையும் சமாளித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.