காத்மாண்டு-நம் அண்டை நாடான நேபாளத்தில் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. .
நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்ட் மற்றும் 550 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது.
இதில் பார்லி.,க்கு 165 எம்.பி.,க்கள் நேரடி தேர்தல் வாயிலாகவும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுன்றனர்.
அதேபோல் மாகாண தேர்தலில் 330 பேர் நேரடி ஓட்டுப் பதிவு வாயிலாகவும், 220 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நாடு முழுதும் 1.79 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட 22 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது.
காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர். மாலை 5:00 மணிக்கு ஓட்டுப் பதிவு நிறைவடைந்தது.
இதில், 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தொங்கு பார்லிமென்ட் அமையும் என சில அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே, நேற்று இரவே ஓட்டு எண்ணும் பணி துவங்கியது. மலைப் பிரதேசங்களில் பதிவான ஓட்டுப் பெட்டிகளை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து வருவதற்கு அதிக அவகாசம் தேவைப்படுகிறது.
மேலும், ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், தேர்தலின் முழுமையான முடிவகள் தெரிவதற்கு ஒரு வாரம் ஆகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement