தமிழக அரசுப் பேருந்து ஒன்று, காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றிருக்கிறது. அந்தப் பேருந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தபோது, அதிலிருந்த பயணியர்கள் கீழே இறங்கியிருக்கின்றனர். அப்போது, அங்கு இறங்க வேண்டிய நபர் ஒருவர் மதுபோதையில் அரசு பேருந்து நடத்துனர் பிரகாஷிடம் வாக்குவாதம் செய்தபடி, கீழே இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து நடத்துனர் பிரகாஷ், மதுபோதையில் இருந்தவரை பேருந்தின் படிக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்றைய தினம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசுப் பேருந்திலிருந்து மதுபோதையில் இருந்த ஆசாமியை கீழே தள்ளிவிட்ட நடத்துனர் பிரகாஷை இன்று காலை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயல் உத்தரவிட்டுள்ளார்.