“மத்திய அரசின் வீண் பிடிவாதத்தால்தான் 733 விவசாயிகள் உயிரிழந்தனர்!" – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, நேற்றிரவு தங்குவதற்காக புல்தானா மாவட்டத்தின் ஜல்கான்-ஜாமோத் தாலுகாவில் உள்ள பெண்ட்வால் என்ற இடத்தில் நடைப்பயணத்தை நிறுத்தினார்.

ராகுல் காந்தி

நேற்றைய தினம் முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் பாட்டியுமான இந்திரா காந்தியின் 105-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு இதே நாளில் மத்திய அரசு புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இந்த நிலையில், நேற்றைய தினத்தை புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளின் வெற்றி தினமாகவும் காங்கிரஸார் கொண்டாடினர். அப்போது, புல்தான் மாவட்டத்திலுள்ள பஸ்தான் என்னும் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், 733 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் . விவசாயிகள்தான் இந்த நாட்டின் குரல். புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று உணர்ந்ததால்தான் அவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஆனால் மோடி அரசாங்கம் அவர்கள் கோரிக்கைகளைப் புறக்கணித்தது. அரசாங்கத்திடம் காவல்துறை, ஆயுதங்கள், நிர்வாகம் என எல்லாம் உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் அவர்களின் குரல் மட்டுமே உள்ளது. இந்த அரசாங்கத்தின் வீண் பிடிவாதத்தால், போராட்டத்தின்போது 733 விவசாயிகள் உயிரிழந்தனர்” என்று கூறினார்.

ராகுல் காந்தி

கூட்டத்தில் பேசிய பின்பு, உயிரிழந்த விவசாயிகளை நினைவுகூரும் வகையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அந்தக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர் பட்டாசுகளை வெடித்தனர். இதைக் கண்டு கோபமடைந்த ராகுல் காந்தி, `இந்த செயல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் அவமதிப்பது போன்றது’ என்று கண்டனம் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஷிகாவுன் – ஜலம்ப் மாவட்டத்தில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் அதிகமாகக் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.