சென்னை: “மாற்றுத்திறனாளிகளுக்கான UDID அட்டை வழங்குவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 56 ஜோடிகளுக்கான திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருணங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து நடத்திவைத்தார். அப்போது முதல்வர் பேசியது: “தமிழகத்தின் முதல்வராக இருந்து நம்மை ஆளாக்கிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் வாழ்ந்த பகுதி இந்த கோபாலபுரம் பகுதிதான். அவர் கோலோச்சிய இடம் இந்த கோபாலபுரம். கோபாலபுரம் என்பது தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னும் சொன்னால், இந்திய துணைக் கண்டத்திற்கே ஒரு தலையாய இடமாக, மறக்க முடியாத இடமாக, வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய இடமாக இந்த கோபாலபுரம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோபாலபுரத்திற்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கின்றனர். எத்தனையோ குடியரசுத் தலைவர்கள் வந்திருக்கின்றனர். எத்தனையோ வெளிநாட்டுத் தலைலர்கள் எல்லாம் வந்து சென்றுள்ளனர்.
இத்தனை சிறப்புக்குரிய பகுதியில் உங்களுடைய திருமணம் நடந்தேறியிருக்கிறது. இதைவிட பெருமை வேறெதுவும் உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. அத்தகைய பெருமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள். உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டி வாஞ்சையோடு அழைத்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். இதன்மூலம் உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தைதான் தலைவர் கலைஞர் அவர்கள்.
எனக்கு மட்டுமல்ல, என் தங்கை கனிமொழிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பெயர் சூட்டியவர் அவர்தான். அந்தவகையில் இது எங்களுடைய குடும்ப விழா. தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பின் அறக்கட்டளையானது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது கடமையை மிக சிறப்பாக ஆற்றி வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, இந்த அமைப்புக்கு சிறந்த சேவையாளர் விருதை வழங்கி பாராட்டியுள்ளார். இந்த அமைப்பின் சார்பிலும் அவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவும் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் பல துறைகள் உள்ளது. அதில் ஒவ்வொருவருக்கும் பல துறைகளை கலைஞர் ஒதுக்கினார். முதல்வரைப் பொருத்தவரை காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்ற முக்கியமான துறைகளை மட்டும் கையில் வைத்துக்கொள்வர். ஆனால், தலைவர் கலைஞர் முதல்வராக வந்தபோது, மாற்றுத்திறனாளி துறையை உருவாக்கி அந்த துறையை தன் கீழ் வைத்துக்கொண்டார்.
அந்த துறையை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எப்படியெல்லாம் பன்படுத்தினார் என்பது உங்களுக்கு தெரியும். இது நெஞ்சுக்கு நெருக்கமான துறை என்று அவர் பலமுறை நெகிழ்ந்து பேசியிரு்கிறார். கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையான கருவிகள் 36 மாதிரிகளில், 7219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நகரப் பேருந்துகளில் ஒயிட் போர்ட் பஸ்களில், மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவரோடு கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். UDID அட்டை வழங்குவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென்று, 2021-22 ம் நிதியாண்டில் 813 கோடியே 63 லட்சம் ரூபாயும், 2022-23 ம் நிதியாண்டில் 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு முதல்வர் பேசினார்.