தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகியிருக்கிறது வாரிசு. வம்சி பைடிபள்ளி இயக்கியிருக்கும் இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் சிங்கிள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரசுடு எனவும் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு ஆந்திராவில் சிக்கல் எழுந்திருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர்கள் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு, “பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின்போது அதிகளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன.
நேரடி தெலுங்கு படத்திற்கு டப்பிங் படங்களைவிட கம்மியான அளவில்தான் திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த வேண்டுமானால் இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளை அதிகமாக ஒதுக்கவேண்டும் என்றும் மிச்சம் இருக்கும் திரையரங்குகளை டப்பிங் படங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தற்போது அவரது படத்துக்கே எமனாக வந்துநிற்கிறது.
டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் என்று அதிரடியாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதனால் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் பான் இந்தியா என வந்துவிட்ட இந்தக் காலத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்வது விரும்பத்தகக்து அல்ல என விஜய்க்கு ஆதரவாக குரல்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயற்குழு புதன்கிழமை கூடுகிறது. அதில், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு பற்றி ஆலோசிக்க இருப்பதாகவும் அவர்கள் முடிவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.