விழித்த தமிழனை இனி வீழ்த்த முடியாது – நீதிக்கட்சி தொடங்கிய நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை

ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் சாதிய ஒடுக்குமுறைகள் நிலவிவந்தன. ஏன் இன்னமும்கூட நடந்துவருகின்றன. அந்த அடக்குமுறைகளை வேரோடு பிடுங்கி வீசி அனைவரும் இங்கு சமம் என்ற சமூக நீதியை நிலைநாட்டுவதற்கென ஆரம்பிக்கப்பட்டது நீதிக்கட்சி. சமூக நீதியை முதல்முதலில் அமல்படுத்தியது நீதிக்கட்சி. இதனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு இன்று பல துறைகளில் முன்னோடியாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி நீதிக்கட்சி வழி வந்த பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டை சமூக நீதியிலும், சமத்துவத்திலும், கல்வியிலும் பல படிகள் முன்னேறிய மாநிலமாக திகழ செய்தனர். அப்படி இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ காரணமாக இருந்த நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று. இதனையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்!

சாதியின் பெயரால் கல்வி – வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்.

தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து – அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்!

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா.. விழி! எழு! நட” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.