விழுப்புரம்: தமிழக இளைஞர் ஒருபுறம் ஆக் கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தி, உயர்ந்த கல்வியைப் பெற்று, எதிர்காலத்தை வளமாக்க முயன்று வருகின்றனர். அதே நேரத்தில் ஊரகப் பகுதிகள் மற்றும் பெரு நகரின் ஒரு சில பகுதிகளில் இளையோரின் பாதை, போதையில் சிக்கி மயக்கப் பாதையாகி வருகிறது.
புத்தகப் பைகளைச் சுமந்த கைகள் தற்போது கஞ்சா பொட்டலங்களைச் சுமக் கின்றன. சென்னையில் ஆன்லைனில் கஞ்சா ஆர்டர் செய்தால் வீடுக ளுக்கே வந்து டெலிவரி செய்வதாக செய்திகள் வருகின்றன. மேலும், ‘சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டார்’ என்று வரும் செய்தி அதிர்ச்சியடைய வைக்கிறது.
நாள்தோறும் நடைபெறும் விபத்துகள், வன்முறைகளில் கஞ்சா போதை பெரும்பங்கு வகிக்கிறது. ஊரகப் பகுதிகளில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் அதிகமாகப் பரவி வருகிறது. பல பெற்றோர் இது பற்றி வெளியே சொல்ல முடியாமல் தவிக் கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கஞ்சா விற்கப்படுகிறது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் அதிக அளவுக்கு கஞ்சா புழக்கம் உள்ளது. இதனால் அண்மையில் நடைபெற்ற விபத்து ஒன்றில் நண்பர் ஒருவர் இறந்து விட, அவருடன் பயணித்த நண்பரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுவும் கஞ்சா போதையில் நடைபெற்றது என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, திருவெண்ணெய்நல்லூர் அருகே தி.இடையார் கிராமத்தில் கஞ்சா போதையில் சில சிறுவர்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் வயதுடைய ஒரு சிறுவனை அடித்தே கொன்றுள்ளனர். கடந்த 7-ம் தேதி விழுப்புரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர், தன் ஆசிரியர் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதில் அவரின் காலணி மட்டும் தீயில் கருகியுள்ளது. சில நாட்களுக்கு முன் மாணவிகளை கேலி, கிண்டல் செய்த மாணவரை கண்டித்த தலைமை ஆசிரியரை அம்மாணவர் தாக்கியதில் அவர் தலையின் பின்புறம் காயம் அடைந்துள்ளார்.
கள்ளச்சாராய வியாபாரிகள் எல்லாம் கஞ்சா விற்க தொடங்கிவிட்டனர். இதை விற்பனை செய்வதும், அதை கொண்டு செல்வதும் மிக எளிது. அண்மை யில், மேற்கு வங்காளத்தில் இருந்து விழுப்புரம் வந்த ரயிலில் கிலோ கணக்கில் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். போக்சோவுக்கு ஈடாக தற்போது கஞ்சா வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும், அசராமல் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.
இதுபற்றி காவல்துறையினரிடம் கேட்டதற்கு, “விழுப்புரம் மாவட் டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக நடப்பாண்டில் கடந்த 17-ம் தேதி வரை 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 275 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 41.367 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4.13 லட்சமாகும். மேலும் 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 154 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்றதாக 681 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.39.65 லட்சம் மதிப்பிலான 3,965 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 704 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இம்மாதம் 731 போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி உட்பட இந்தாண்டு 4,852 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. எங்களால் ஆன தீவிர முயற்சியை தொடர்ந்து மேற்கொள்கிறோம்” என்கின்றனர்.
“கஞ்சாவுக்கு அடிமையான மாணவர்களுக்கு மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் மூலம் தேவையான ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும்.இதனை கட்டுப்படுத்த காவல் துறையோடு, நாமும் இணைந்து செயல்பட்டால்தான் வருங்கால தமிழகம் தள்ளாடாமல் இருக்கும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.