வெளிநாட்டு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நாற்பது பேர் யூலை மாதத்தில் உள்ளீர்க்கப்படுவர்

2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு சேவைக்கு நாற்பது பேர் கொண்ட குழுவை யூலை முதல் ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரி தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் (10) அதன் தலைவர் அமைச்சர் கௌரவ அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது. இதன்போது வெளிநாட்டு சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளவர்களின் தரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையை வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதரகங்களின்  நுழைவாயில்களுக்கு அருகில் உள்ள நடைபாதைகளில் பல இலங்கையர்கள் காலை முதல் நண்பல் வரை நீண்ட வரிசையில் நிற்பது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இது சிறந்ததொரு நிலைமை அல்ல என்றும், இதனைத் தவிர்ப்பதற்கு முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சின் நாளாந்த செயற்பாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியிருப்பதுடன், இதுபோன்ற சர்வதேசத்தின் அக்கறைகளை உள்நாட்டில் முகங்கொடுப்பதற்கான வழிகளை ஆராய்வதில் வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் இங்கு விளக்கமளித்தார்.

கடன் மீள்கட்டமைப்புச் செயற்பாடு தொடர்பில் பல்வேறு சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்த அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆட்கடத்தல் காரர்களால் நடுக்கடலில் கைவிடப்பட்ட 303 இலங்கையர்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் வெளிவிவகார அமைச்சின் சேவைகள் வாரஇறுதி நாட்களிலும் வழங்கப்பட்டமை குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். அது மாத்திரமன்றி கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக கைதுசெய்யப்பட்டது முதல் அவருக்கான சட்ட ரீதியான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார். அது மாத்திரமன்றி லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உலக சுற்றுலா மாநாட்டில் இலங்கை குறித்த பிரசாரங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. வெளிவிவகார அமைச்சினால் சர்வதேச மட்டத்தில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் உரிய பிரசாரம் கிடைப்பதில்லையென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ டயானா கமகே, சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) காவிந்த ஜயவர்தன, கௌரவ வசந்த யாப்பாபண்டார, கௌரவ சமிந்த வீரக்கொடி, கௌரவ வீரசுமன வீரசிங்ஹ ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.