சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சக்தி என்பவர் தினமும் இருசக்கர வாகனத்தில் டீ விற்று வருகிறார். இவருக்கு சிந்து, சுந்தரேஸ்வரா என்ற இரு பிள்ளைகள் உள்ளன. இவருடைய மகள் சிந்து 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டின் மாடியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் சிந்துவின் கால் எலும்பு முறிந்து நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிந்து தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொது தேர்வை தன்னம்பிக்கையுடன் நடக்க முடியாத சூழலிலும் எழுதி முடித்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின் மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் “படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசை ஏற்கும். விபத்தில் காலில் எலும்புகள் முறிந்தாலும் தன்னம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முடியாமல் தேர்வுகளை எழுதி வரும் மாணவி சிந்துவை கண்டு பெருமைதான் கொள்கிறேன் மீண்டும் வாலிபால் ஆட வேண்டும் என்கிற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற அரசு உதவும்” என தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து மாணவி சிந்துவிற்கு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துவை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து “அரசு அனைத்து உதவிகளையும் செய்யும், ஒரு தந்தையாக நான் இருக்கிறேன்” என நம்பிக்கை கொடுத்தார்.
கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த சிந்து தற்பொழுது குணமடைந்து நடக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது மருத்துவ செலவிற்கு உதவியதற்காக மாணவி சிந்து நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்பொழுது நீங்கள் செய்த உதவியே நான் எழுந்து நடத்த காரணம் என சிந்து உருக்கமாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.