Isha Ambani Baby: அம்பானி குடும்பத்திற்கு வந்தாச்சு புதிய 'வாரிசு'.. இரட்டை குழந்தைகளுக்கு தாயான இஷா அம்பானி!

உலகின் பெரும் கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி – நிதா அம்பானி தம்பதிக்கு, ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அம்பானியின் மகள் இஷா, அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் நேற்று (நவ. 19) இரட்டை குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து அம்பானி குடும்பத்தார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,”எங்கள் மகள் – மருமகன், இஷா – ஆனந்த் தம்பதியர் நேற்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, எல்லாம் வல்ல இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர். 

இஷா, பெண் குழந்தை ஆதியா, ஆண் குழந்தை கிருஷ்ணா ஆகியோர் நலமுடன் உள்ளனர். தங்களின் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் ஆதியா, கிருஷ்ணா, இஷா, ஆனந்த் ஆகியோருக்கு உங்களின் ஆசிர்வாதங்களும், வாழ்த்துகளும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அம்பானியின் பிள்ளைகளான இஷா – ஆகாஷ் ஆகியோரும் இரட்டை குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  

2018ஆம் ஆண்டு, இஷா அம்பானிக்கு, ஆனந்த் பிரமால் உடன் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு, அரசியல்வாதிகள், பிரபல சினிமா நட்சத்திரங்கள், கோடீஸ்வரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதேபோன்று, அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது மனைவி ஸ்லோகா அம்பானிக்கும் 2020ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, முகேஷ் அம்பானி – நீதா அம்பானி ஜோடியின் பேரக்குழந்தைகள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வணிகத்தின் தலைவராக ஈஷா அம்பானி நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில், முகேஷ் அம்பானி, தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியை தனது புதிய ஆற்றல் வணிகத்தின் தலைவராக நியமித்தார். மேலும், ஜியோ நிறுவனத்தின் பொறுப்பை ஆகாஷ் அம்பானியிடம், முகேஷ் அம்பானி ஒப்படைத்தார். ரிலையன்ஸின் இந்த மூன்று வணிகங்களும் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளன. 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.