“அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பா” திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து திருநாவுக்கரசு

Indian General Election 2024: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, “திமுக காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் தொடருந்து பேசிய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு, “மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தாலுக்கா மருத்துவமனைகளில் டயலாசிஸ் வசதி அதேபோல் கேன்சர் நோய்களுக்கான சிகிச்சை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துளோம் என கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் தற்போது நடைபெற்று வரும் குழப்பங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “கட்சி என்று இருந்தால் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் இவை பேசி சரி செய்ய வேண்டிய விஷயம் என்றார். கடல் என்று இருந்தால் அலைகள் இருப்பது போல கட்சி என்று இருந்தால் பிரச்சனைகள் இருப்பது இயல்பு எனவும் இவை தமிழக காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் பாதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பான முடிவுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய வேண்டிய விஷயம் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தலைமையை சந்திப்பது வழக்கமான ஒன்று எனவும் கூறினார்.,

திமுக காங்கிரஸ் கூட்டணி தெளிவாக உள்ளது எனவும் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக அதிமுக வுக்கு பிறகு காங்கிரஸ் தான் பெரிய கட்சி. தமிழகத்தில் பா.ஜக வளர்ந்து ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது என விமர்சித்த அவர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசுபவர்கள், பா.ஜ.க அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்புவதில்லை என்றார்.

முன்னதாக பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதி ஏழைகளுக்குகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வரவேற்றார். அதேநேரத்தில் 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சமூகநீதிக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என ஆளும் கட்சி திமுக தெரிவித்திருந்தது. 

அதேபோல ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஏழு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதில் கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலையானார். இந்த விவகாரத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மாறுபட்ட கருத்து இருந்தது. இப்படி அடுத்தடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இன்று திமுக காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.