வாஷிங்டன் ”உலகில் அமெரிக்காவுக்கு மிகச் சிறந்த பலன் தரக் கூடிய, பாரத்தை சுமக்கக் கூடிய, இணைந்து பயணிக்கக் கூடிய நாடு என்றால், அது பிரதமர் மோடியின் இந்தியா தான்,” என, அமெரிக்க முதன்மை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பின்னர் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகம்சார்பில், பல்வேறு மதப் பண்டிகைகளை கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சாந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அமெரிக்க நிர்வாகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிகாரிகள், எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.
அமெரிக்க முதன்மை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பின்னர் இதில் பேசியதாவது:
இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு மிக மிக வலுவாக உள்ளது. இந்த உலகத்தில் தனக்கு சிறந்த பலன் தரக் கூடிய, பாரத்தை சுமக்கக் கூடிய, இணைந்து பயணிக்கக் கூடிய நண்பனாக இந்தியாவை அமெரிக்கா பார்க்கிறது.
அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி இடையேயான நட்பு இதை உறுதிப்படுத்துகிறது.
இருவரும் இதுவரை, ௧௫ முறை சந்தித்து பேசியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் உறவு வலுப்பட்டு வருகிறது. இந்த ஆண்டை, இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் மிகச் சிறந்த ஆண்டாக கருதுகிறோம். வரும் ௨௦௨௩, இதை விட மிகச் சிறந்ததாக இருக்கும்.
ஆசிய நாடான இந்தோனேஷியாவில் சமீபத்தில் ‘ஜி – ௨௦’ அமைப்பின் கூட்டம் நடந்தது. அதில், கூட்டறிக்கை வெளியிடுவதில் அதிபர் ஜோ பைடன் உட்பட அனைத்து நாட்டுத் தலைவர்கள் இடையே, ஒருமித்த கருத்தை உருவாக்கினார் பிரதமர் மோடி.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்