இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குழந்தைகள் பெண்கள் உட்பட 162 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் நண்பகல் 12 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சிலாங்கூர் நகரில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.6ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது . பெருத்த சேதத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 76 கி.மீ தொலைவு வரை உணரப்பட்டுள்ளது.

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த பதற்றத்துடன் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 162 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மலைகள் சூழ்ந்த மாவட்டமான சிலாங்கூர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகின. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் வீதிகள் மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளது.

நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த மக்கள் உயிருக்கு அஞ்சி அலறியபடி ஓடிய காட்சியும், சிலர் உடலில் அடி பட்டு ரத்தம் வடிய என்ன செய்வது என தெரியாமல் பரிதாபமாக அமர்ந்திருந்த காட்சியும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் அவசர கால மீட்பு குழுவினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். நிலநடுக்கத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்து கண்ணீர் வடித்த பொதுமக்கள் சேதமடைந்த வீடுகளில் இருந்து எஞ்சிய பொருட்களை எடுத்துக் கொண்டு அரசின் முகாம்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்தோனேசியாவின் பல நகரங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நகரம் சந்தித்த மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகதான் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததால் தரையில் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் படுகாயம் அடைந்தவர்களின் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.