ஜகார்த்தா: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தால், பள்ளி உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து 162 பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த 700க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள சியான்சுரில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பள்ளி, மருத்துவமனை மற்றும் ஏராளமான வீடுகள் இடிந்தன.
இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 162 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட 700க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
சியான்சுரில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியில் பல இடங்களில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. அதேபோல் ஜகார்த்தா நகரிலும் சில இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.
கடந்த 2004ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ‘சுனாமி’ பேரலைகள் உருவாகி, தெற்காசிய கடலோர நாடுகளில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement