ஈரோடு மாவட்டத்தில், உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பவானி 23-வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் பொது கழிப்பறை கட்டிடத்தில் உள்ள குறை நிறைகள் மற்றும் கருத்துக்களை பொதுமக்கள் கியூ.ஆர். கோடு மூலம் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும், நிறை, குறைகளையும் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கியூ.ஆர். கோடு புகார் முறை பவானி நகராட்சிக்கு உட்பட்ட இருபத்தேழு சமுதாய கழிப்பறைகள் மற்றும் மூன்று பொது கழிப்பறைகள் என்று முப்பது இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு இருபத்து நான்கு மணி நேரத்தில் தீர்வு காணப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் ஜெகதீஷ், 23-வது வார்டு கவுன்சிலர் கவிதா மோகன், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், கழிப்பறையை சுத்தமாக வைத்திருந்த தூய்மை பணியாளர் கணவன்-மனைவி இருவருக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி மரியாதையும் செலுத்தப்பட்டது.