உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் கடந்த 18-ம் தேதியன்று யமுனா விரைவுச்சாலை அருகே சூட்கேஸ் ஒன்றில், பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை போலீஸார் மீட்டனர். அந்தச் சடலம் அதிக ரத்தக் காயங்களுடன் காணப்பட்டது. அதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர்.
இறந்த பெண் பற்றிய விவரங்களைக் கண்டறிய, டெல்லியில் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை போலீஸார் ஒட்டினர்.

இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் ஆயுஷி சவுத்ரி (22) என்றும், அவர் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. அதேபோல பெண்ணின் தாய், சகோதரர் இருவரும் போஸ்டர் மூலம் அவரை அடையாளம் கண்டனர். அதன்பின்னர், தெற்கு டெல்லியிலுள்ள படர்பூரில் வசிக்கும் பெண்ணின் தந்தை நிதேஷ் யாதவ், உடலை அடையாளம் காணவந்தார். அப்போது அவரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்தன. அதனால், போலீஸார் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர் தன் மகளைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். அதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

நிதேஷ் யாதவ் போலீஸ் விசாரணையில், “என் மகள் என்னுடைய பேச்சை கேட்கவில்லை. மேலும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை எங்களை மதிக்காமல் திருமணம் செய்துகொண்டார். அதனால், ஆத்திரத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டேன். பின்னர் அவர் உடலை சூட்கேஸில் அடைத்து மதுராவில் வீசிவிட்டேன்” எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாயாரையும் போலீஸார் கைதுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.