`எங்களுக்கே தெரியாம எங்க ஊர்ல கழிவுநீர் கால்வாய் இருக்குதா?’ – RTI-யால் அதிர்ந்த மக்கள்!

வேலுார் மாநகராட்சியில் கட்டப்படாத கால்வாய்க்கு டெண்டர் விட்டு பணிகள் முடிந்து தணிக்கை நடந்துள்ளது RTI மூலம் அம்பலமாகியுள்ளது.
வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்துக்குபட்ட ஒன்றாவது வார்டில் ராஜிவ்காந்தி 3-வது தெருவில் தற்போது வரை கழிவு நீர் கால்வாய் இல்லாததால் அப்பகுதி மக்கள் பொது வெளியில் கழிவு நீரை விடும் சூழல் உள்ளது. இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் தெருவுக்கு கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரி 8 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்வியில், அத்தெருவுக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 image
இது தொடர்பாக மனு செய்த அப்பகுதி சேர்ந்த துறை என்பவர் கூறுகையில், “நாங்கள், வேலுார் மாநகராட்சி 1வது மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட காட்பாடி கல்புதுார் ராஜிவ்காந்தி நகர் 3வது மெயின் ரோட்டில் வசித்து வருகிறோம். இங்கு கழிவுநீர் கால்வாய் கட்டி தர வேண்டும் என்று, 10 ஆண்டுகளாக மனுக்கள் அளித்து வருகிறோம்.
இதையடுத்து, 2019ம் ஆண்டு கால்வாய் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்றும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் மாநகராட்சி மூலமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கவில்லை. அதேநேரம், எங்கள் பகுதியில் கால்வாய் கட்டப்பட்டு இருப்பதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், எங்கள் பகுதியில் கால்வாய் கட்டுமான பணிகள் முடிந்த தேதி, திட்ட மதிப்பீடு தொடர்பான தகவல்கள் மற்றும் இந்த பணிகள் முடிந்ததற்கு தணிக்கை செய்து வழங்கிய அதிகாரி ஆகிய விவரங்களை தெரிவிக்குமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது.
image
இதற்கு, மாநகராட்சி பொதுத்தகவல் அலுவலரிடம் இருந்து, கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி பதில் அளிக்கப்பட்டது. அதில், `குறிப்பிட்ட பகுதியில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, 9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. தொடர்ந்து, 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி பணிகள் முடிந்தது. தணிக்கையானது எல்எப் ஆடிட் மூலமாக செய்யப்பட்டது’ என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்ததும், நாங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினோம். மேலும், இந்த விவரங்களின் படி, எங்கள் பகுதியில் கட்டப்பட்ட கால்வாய் காணாமல் போய்விட்டதாக தான் கருத வேண்டியுள்ளது. இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு, எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாயை கட்டித்தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 image
இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்ட போது, “மனுதாரர் இது தொடர்பாக ஏற்கனவே தகவல் கேட்டிருந்தார். அவருக்கு ஒன்றாவது மண்டல அதிகாரிகள் மூலம் சரியான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் மேல் மூறையீடு மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் கேட்க்கப்பட்ட கேள்விக்கு இத்தகைய பதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பதில் மொத்தம் 3 தெருக்களுக்கான பதில்” என்றும் தெரிவித்தனர். மேலும், “ஒருவேளை எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் தவறுதலான பதில் அளித்து இருக்கும் பட்சத்தில் விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.