“கண்கலங்கிட்டே வசனம் எழுதுவார்,சொல்லிக் கொடுக்கும்போது..!" – ஆரூர்தாஸ் நினைவுகள் பகிரும் விஜயகுமாரி

தமிழ் சினிமாவின் பெருமைமிகு வசனகர்தா ஆரூர் தாஸின் மறைவு, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. `பாசமலர்’, `அன்பே வா’, `புதிய பறவை’ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த இவரின் வசனம், கிளாஸிக் காலகட்ட சினிமாவின் தனித்துவ அடையாளங்களில் ஒன்று. ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதிய ஆரூர் தாஸின் நினைவுகள் குறித்து, மூத்த நடிகை விஜயகுமாரியிடம் பேசினோம்…

ஆரூர் தாஸ்…

“எங்க காலத்து சினிமாக்களின் வெற்றிக்குக் கதையாசிரியர்களின் பங்கு முக்கியமானது. அதுல ஆரூர் தாஸ் அண்ணன் எழுதிய வசனம், எம்.ஜி.ஆர் அண்ணன், சிவாஜி அண்ணன் உட்பட பெரும்பாலான கலைஞர்களின் சினிமா வளர்ச்சிக்கும் முக்கியமானதா இருந்துச்சு. தன் தொழில்ல அவர் அளவுகடந்த மதிப்புடனும் பக்தியுடனும் இருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்லயும் உடனுக்குடன் வசனம் எழுதிக் கொடுப்பார். கதையுடன் ஒன்றிப்போய் வசனம் எழுதுறதுல, தாஸ் அண்ணன் வல்லவர்.

சென்டிமென்ட் காட்சிகளுக்கு வசனம் எழுதுறப்போ, கதையுடன் ஒன்றிப்போயிடுவார்னு நினைக்கிறேன். ஏன்னா, அப்படிப்பட்ட நேரத்துல கண்ணீருடன் அவர் வசனம் எழுதுறதைப் பலமுறை பார்த்திருக்கேன். அழுகை, கோபம், சிரிப்புனு கதை நகர்வுக்கு ஏற்ப தத்ரூபமா பேசிக்காட்டி வசனத்தைச் சொல்லிக் கொடுப்பார். டயலாக் சொல்லிக் கொடுக்கிறப்போ, சம்பந்தப்பட்ட நடிகர்கள் எத்தனை முறை கேட்டாலும் கோபமே படமாட்டார். கதையையும் வசனத்தையும் நாங்க நல்லா புரிஞ்சுக்கிறவரை பொறுமையா சொல்லிக்கொடுப்பார்.

நடிகை விஜயகுமாரி

விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு எல்லோர்கிட்டயும் அன்பா பழகுவார். பக்கம் பக்கமா வசனம் எழுதி, கடகடனு பேசிக்காட்டினாலும், தனிப்பட்ட முறையில மத்தவங்ககிட்ட அளவாதான் பேசுவார். தான் உண்டு, தன் வேலை உண்டுனுதான் இருப்பார். தேவையில்லாம மத்தவங்க விஷயத்துல தலையிட மாட்டார். அதனாலயே, அந்தக் காலத்துல பெரும்பாலான நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்மேல உயர்வான மதிப்பு வெச்சிருந்தாங்க. அவர் வசனம் எழுதியதுல 12 படங்கள்கிட்ட நடிச்சிருக்கேன்.

`நானும் ஒரு பெண்’ படத்தைப் பார்த்த பலரும் கண்ணீர்ல கரைஞ்சிருப்பாங்க. உயிரோட்டமான அந்தக் கதைக்கு ஆரூர் தாஸ் அண்ணன் எழுதிய வசனமும் முக்கிய காரணம். அந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது எனக்குக் கிடைச்சதுக்கு, அண்ணனுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என்றவர், ஆரூர் தாஸ் இயக்கிய ஒரே படமான `பெண் என்றால் பெண்’ படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆரூர் தாஸூக்கு மரியாதை செய்யும் முதல்வர் ஸ்டாலின்

“தொடர்ச்சியா வசனம் எழுதிகிட்டிருந்தவர், ‘பெண் என்றால் பெண்’ படத்தின் மூலமா இயக்குநராவும் ஆனார். அந்தப் படத்தின் கதைக்கு நான்தான் பொருத்தமா இருப்பேன்னு அவர் உறுதியா நம்பினதா என்கிட்ட சொன்னார். கல்யாணத்துக்குப் பிறகு, அப்போ சினிமாவிலிருந்து விலகியிருந்தாங்க என் தோழி சரோஜா தேவி. செகண்டு ஹீரோயினா அவரை தாஸ் அண்ணன் அணுகியிருக்கார். எனக்காகவே அந்தப் படத்துல சரோஜா தேவி முக்கியமான கேரக்டர்ல நடிச்சுக் கொடுத்தாங்க.

ரொம்ப எதிர்பார்ப்புடன் அந்தப் படத்தை உருவாக்கினோம். ஆனா, அந்தப் படம் தோல்வியடைஞ்சுடுச்சு. அதுக்கப்புறமாவும் நூற்றுக்கணக்கான படங்களுக்கு வசனம் எழுதியிருந்தாலும், ஆரூர் தாஸ் அண்ணன் இயக்குநரா எந்தப் படத்தையும் எடுக்கவேயில்லை. ஒருவேளை `பெண் என்றால் பெண்’ படம் வெற்றி பெற்றிருந்தா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மாதிரி குடும்பபாங்கான நிறைய படங்களை எடுத்திருப்பார்னு நினைக்கிறேன்.

‘பாசமலர்’ திரைப்படம்…

சினிமாவுலயும் குடும்ப வாழ்க்கையிலயும் பெருமைப்படுற வகையில நல்லபடியா வாழ்ந்தார். 91 வயசு வரைக்கும் நீண்ட ஆயுளுடன் அவர் வாழ்ந்திருக்கார்னு நினைக்கிறப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அவரின் ஆன்மா சாந்தியடையணும்” என்று முடித்தார் விஜயகுமாரி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.