பணம் என்பது ஒரு மனிதனின் அடையாளம் கிடையாது. அது ஒரு தேவை. ஆனால், பணம் இல்லாதவர்களை மிக மோசமாக நடத்துகின்ற கொடுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் குணத்தை அறிந்து செயல்படும் தன்மையும், அவர்களது நல்ல குணங்களை ஆராயும் தன்மையும் இப்போது எல்லாம் காணாமல் போய்விட்டது.
மனித நேயம் என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு தான் உலகம் சென்று கொண்டிருக்கிறது. அந்த கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக கன்னியாகுமரியில் ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் ஒரு பிச்சைக்காரர் நகை கடைக்கு சென்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது, மிகவும் வயதான அந்த பிச்சைக்காரரை நகைக்கடை உரிமையாளர் தனது செருப்பை கழட்டி அடிக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றது.
உள்ளே சென்று பிச்சை கேட்டபோது அவர்கள் கொடுக்கவில்லை. இதனால், புலம்பிக்கொண்டே அந்த முதியவர் கடையிலிருந்து வெளியே வருகின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நகைக்கடை ஊழியர் திடுதிடுவென ஓடி வந்து தனது செருப்பை கழட்டி அந்த முதியவரின் தலையில் பலமாக தாக்குகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களை பெற்று வருகிறது.