உலகக்கோப்பை கால்பந்து ஜூரம் இந்தியாவிலும் தீவிரமாக உள்ளது. அதிலும் குறிப்பாக வெறித்தனமான ரசிகர்கள் உள்ள கேரளாவில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துவருகின்றன.
இந்தியாவை பொறுத்தமட்டில் கால்பந்து விளையாட்டிற்கு பிரபலமான 2 மாநிலங்கள் கேரளா மற்றும் மேற்கு வங்கம் தான். இந்த 2 மாநிலங்களில் கால்பந்து கொண்டாடப்படுகிறது. அதிகமான வீரர்களும், ரசிகர்களும் இந்த மாநிலங்களில் தான் உள்ளனர்.
கேரளாவில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகிய வீரர்களின் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் ஆஸ்தான வீரர்களின் கட் அவுட்டுகளை வைத்து அசத்தியுள்ளனர்.
இதில் உச்சமாக கேரளாவில் 17 நண்பர்கள் சேர்ந்து உலகக்கோப்பை போட்டிகளை எந்த இடையூறுமின்றி பார்ப்பதற்காக ரூ.23 லட்சத்துக்கு ஒரு வீட்டை வாங்கியுள்ளனர்.
மிகத்தீவிரமான கால்பந்து ரசிகர்களான இந்த 17 பேரும் கிளப் போட்டிகளைக்கூட ஒன்று விடாமல் பார்க்கக்கூடியவர்கள். 17 பேரும் ஒரு நபரின் வீட்டில் தினமும் போட்டிகளை காண்பது சாத்தியம் இல்லாதது.
எனவே 17 பேரும் சேர்ந்து ரூ.23 லட்சத்துக்கு ஒரு வீட்டை வாங்கி அங்கு பெரிய திரையில் அனைத்து போட்டிகளையும் பார்க்கவுள்ளனர். அந்த வீட்டிற்கு அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுகல் அணிகளின் நிறங்களில் பெயிண்ட் அடித்துள்ளனர்.
மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோ ஆகியோரின் பேனர்களை சுற்றி வைத்து அசத்தியுள்ளனர். தங்களுக்கு பிறகு அடுத்த தலைமுறையினர் இந்த வீட்டில் கால்பந்து போட்டிகளை பார்க்கலாம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
newstm.in