சபரிமலையில் நேற்று அதிகபட்ச கூட்டம் நடை அடைத்தாலும் 18 படியேற அனுமதி| Dinamalar

சபரிமலை, ர்த்திகை ஒன்றாம் தேதி நடை திறக்கப்பட்ட பின் நேற்று சபரிமலையில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. இரவிலும் பக்தர்கள், 18 படியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் துவங்கியுள்ளன. சபரிமலை பக்தர்கள் இந்தாண்டு ஆன்லைன் முன்பதிவு வாயிலாக மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தினசரி எவ்வளவு பக்தர்கள் வருகின்றனர் என்ற விபரம் போலீசுக்கும், தேவசம்போர்டுக்கும் தெரிந்து விடுகிறது. தினமும் சராசரியாக 50 ஆயிரம்பேர் தரிசிக்கின்றனர்.

நேற்று 70 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் நேற்று சன்னிதான சுற்றுப்புறங்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. 18-படியேற நீண்ட வரிசை காணப்பட்டது. பிரசாத கவுன்டர்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

கூட்டம் அதிகமாகி வருவதால் இரவில் மலையேறி வரும் பக்தர்கள் நடை அடைக்கப்பட்டிருந்தாலும், 18 படிகளில் ஏற அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு படி ஏறுபவர்கள் வடக்கு வாசல் வழியாக வெளியே சென்று விட்டு, அடுத்து நாள் அதிகாலை நடை திறக்கும் போது வடக்கு வாசல் வழியாக வந்து சுவாமி கும்பிட முடியும்.

சோறு, பாயசம்

பக்தர்கள் இருமுடியில் கொண்டு வரும் அரிசி மற்றும் பொருட்களை ஆங்காங்கு விட்டு செல்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில் அரிசிக்காக வைக்கப்பட்டுள்ள உண்டியலில் அவற்றை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்லது அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை 18-ம் படியின் வலது பக்கம் அரவணை கவுன்டருடன் சேர்ந்திருக்கும் சர்க்கரை பாயச கவுன்டரில் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது அதற்கு ஈடான வெள்ளைசோறு அல்லது பாயசம் பெற்றுக் கொள்ளலாம்.

அன்னதான கட்டணம்

சபரிமலையில் அன்னதானம் வழங்குவது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. அய்யப்பனை அன்னதான பிரபு என்று அழைக்கின்றனர். முன்பு சிறிய அளவில் ஆங்காங்கே பக்தர்கள் பொருட்களை கொண்டு வந்து அன்னதானம் நடத்தி வந்தனர். ஆனால், இது விபத்து உள்ளிட்ட பிரச்னைக்கு காரணமாக இருக்கும் என கருதி கேரள உயர்நீதிமன்றம் தடை செய்தது.இதனால் தேவசம்போர்டு அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் அன்னதானம் வழங்க வசதி செய்தது. ஒரு நாளைக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்க, 6 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளைக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.அவசர தேவைக்கு: பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் போது செங்குத்தான ஏற்றத்தில்மூச்சுத்திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டால் மருத்துவ உதவி பெற, 0473 – 520 3232 என்ற எண்ணில் அழைக்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.