சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை மெட்ராஸ் ஐ எனும் கண் நோய் பரவல் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து மெட்ராஸ் ஐ கண் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசு சார்பில் 10 இடங்களில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக எழும்பூர் கண் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் கண் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக முழுவதும் 90 இடங்களில் கண் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 10 இடங்களில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை சிகிச்சைக்கு வருகிறார்கள்.

தமிழக முழுவதும் மெட்ராஸ் ஐ எனும் கண் நோய்க்கு 4000 முதல் 4500 பேர் வரை சிகிச்சைக்கு வருகிறார்கள். வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் 1.5 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த நோயினால் கண் பார்வை இழப்பு ஏற்படவில்லை. குறிப்பாக சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. கண் நோய் பாதித்தால் கட்டாயம் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். கண் நோய்க்கான மருந்து தட்டுப்பாடு இல்லை” என அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.