தீண்டாமை சாதி, மதம், குடி எனப் பலவாறான வகைகளில் தொடர்ந்து உழன்றுகொண்டேதான் இருக்கிறது. சுதந்திர தினத்தன்று பானையில் தண்ணீரைக் குடித்த பட்டியலின சிறுவன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம், தோட்டத்தில் கொய்யாக்கனி பறித்த பட்டியலின சிறுவனை அடித்துக்கொன்ற சம்பவம் என நாளும் தீண்டாமை நீண்டுகொண்டே போகின்றன. அத்தகைய செயல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அந்தவரிசையில் தற்போது கர்நாடகாவில், பட்டியலினப் பெண் தண்ணீர் குடித்ததால், மாற்று சமூகத்தினர் அந்த தொட்டியைக் கோமியத்தால் சுத்தம்செய்த அவலம் அரங்கேறியிருக்கிறது.
கடந்த நவம்பர் 18-ம் தேதி ஹெக்கோதாரா கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த பட்டியலினப் பெண், மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதியிலிருந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் அருந்தியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தினர், பெண் தண்ணீர் குடித்த தொட்டியைக் கோமியத்தால் சுத்தம் செய்திருக்கின்றனர். இத்தனைக்கும் அந்தப் பகுதியிலிருக்கும் அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் அனைவரும் தண்ணீர் குடிக்கலாம் என்று எழுதப்பட்டுமிருக்கின்றன.

பின்னர் இந்த சம்பவம் குறித்து பேசிய அந்தப் பகுதி தாசில்தார் பஸ்வராஜ், “குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது, ஆனால் அது கோமியத்தால் சுத்தம் செய்யப்பட்டதா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. அந்தப் பெண் தொட்டியிலிருந்து தண்ணீர் குடிப்பதை யாரும் பார்க்கவில்லை. நாங்கள் அந்தப் பெண் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். பின்னர் இது நடந்தது உண்மையென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நாங்கள் பாகுபாடு காட்டியதற்காக வழக்கு போடுவோம்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள், பட்டியலின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை அனைத்து தொட்டிகளுக்கும் அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.