‘நீங்கள் மட்டும் இதை அப்படியே எடுத்துவிட்டால்’ – 'Dr.56' பட விழாவில் பிரியாமணி சுவாரஸ்யம்

ராஜேஷ் ஆனந்த்லீலா இயக்கி பிரியாமணி நடித்துள்ள ‘டி.ஆர் 56’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை பிரியாமணி, நடிகர் தயாரிப்பாளர் பிரவீன், இயக்குநர் ராஜேஷ் ஆனந்த்லீலா ஆகிய படக்குழுவினருடன், இயக்குநர்கள் கௌரவ், ராகவன், டான் சாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.

நிகழ்வில் பேசிய பிரியாமணி “பத்து வருடங்களுக்குப் பிறகு என்னுடைய படம் தமிழில் வெளியாகிறது. இதற்குமுன் தமிழில் நான் நடித்த ‘சாருலதா’ படம் வெளியானது. இப்போது மீண்டும் என்னுடைய படத்திற்காக சென்னை வருவதும், உங்களை சந்திப்பதும் மகிழ்ச்சி. ‘டி.ஆர்.56’ படக் குழுவினர், கதை சொல்வதற்காக என்னுடைய வீட்டுக்கு வந்தபோது, கதை கேட்டுவிட்டு ஒன்று தான் கூறினேன். நீங்கள் சொன்னதை அப்படியே எடுத்துவிட்டால் படம் பெரிய ஹிட்டாகும். அதேபோல் படத்தைப் பார்த்தபோது சொன்னதை செய்திருக்கிறார்கள் என உணர்ந்தேன்.

இந்தப் படத்தில் ஒரு நாய்குட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் நான் நடிக்க அந்த நாய் குட்டியும் ஒரு காரணம். அதற்கு அடுத்த முக்கியமான காரணம், இந்தக் கதை மெடிக்கல் மாஃபியா பற்றியது. இன்றும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நிறைய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள். எனவே, படம் பார்க்கும்போது அந்த உண்மை ஒவ்வொருவருக்கும் புதிதாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளித்த பிரியாமணி, “பத்துவருடம் கழித்து தமிழில் நடிக்கிறீர்கள் என்பது என்ன மாதிரியான உணர்வாக இருக்கிறது?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்னுடைய கரியர் ஆரம்பித்தது தமிழில் தான். பாரதிராஜா, பாலுமகேந்திரா, அடுத்தது ‘பருத்திவீரன்’ என பல நல்ல விஷயங்கள் நடந்தது. மறுபடி இங்கு திரும்பிவருவது கொஞ்சம் நடுக்கமாக தான் இருக்கிறது. ஆனாலும் ஒரு நல்ல படத்துடன் வருகிறேன். இந்தப் படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் எடுக்கப்பட்டது. அடுத்து வரும் ‘கொட்டேஷன் கேங்’ படமும் தமிழில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வர இருக்கிறது” என்றார்.

“இது டாக்டர்கள் செய்யும் தவறை தட்டி கேக்கும் படமாக இருக்குமா?” என்று கேட்கப்பட்டதற்கு, “தட்டி கேட்பது என்றில்லை. இது போன்ற விஷயங்களும் இங்கு நடக்கிறது என்பதைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டது” என்று பிரியாமணி கூறினார்.

படத்தில் இருக்கும் 56-க்கு எதுவும் காரணம் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டபோது, “படத்தின் நாயகன் பிரவீன். படத்தில் 56 நிமிடங்களுக்கு ஒரு முறை என்னுடைய கதாபாத்திரம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய மாதிரி அமைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் 56-க்கு அர்த்தம். மேலும் இந்தப் படத்தின் தலைப்பில் உள்ள டி.ஆர். என்பது டாக்டரைக் குறிப்பது அல்ல. அதற்கு என்ன அர்த்தம் என்பது படம் பார்க்கும் போது தெரியும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.