புதிதாக இரண்டு நிலையியற் குழுக்களை அமைப்பது தொடர்பான நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் ……….

ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைய அமைக்கப்படவுள்ள இரு குழுக்கள் தொடர்பான நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கையை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன  (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கமைய வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு மற்றும் பொருளதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுக்களின் அமைப்பு, பணிகள் மற்றும் அதிகாரங்கள் ஆகியன இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு கூடி இந்த இரண்டு குழுக்களையும் நிறுவுவதற்கும், இது தொடர்பில் 122வது மற்றும் 123வது நிலையியற் கட்டளைகளைத் திருத்தி அவற்றை நிலையியற் கட்டளைகளில் சேர்த்துக் கொள்வதற்கும் ஒப்புதல் வழங்கியிருந்தது.

அறிக்கையின்படி, இந்த இரண்டு குழுக்களின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு.

  • வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு

 

இதற்கமைய, வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவெனப் பெயர்குறிக்கப்பட்ட குழுவுக்கு தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் அமைச்சரவை அமைச்சர்கள் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை பதினாறாகும்.

இலங்கையின் வங்கித்தொழில், காப்புறுதி மற்றும் ஏனைய நிதியியல்துறை சேவைகளின் தொழில்வாண்மை ரீதியான நியமங்கள் மற்றும் கலாசாரம் பற்றி பரிசீலிப்பது இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமாகும்.

சட்டவாக்க மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தும் செயற்பாடுகளுக்காக நியமங்களை மேம்படுத்துவதற்கும் விதப்புரைகளை ஏற்பாடு செய்வதற்கும் இந்நிறுவனங்களின் நுகர்வோர்களுக்கு வலுவூட்டுவதற்கும் அதிகரித்த ஒழுக்கநெறியை ஏற்பாடு செய்வதற்கும் மேம்பட்ட தொழிற்பாடு மற்றும் பன்முகத்தன்மையான வங்கித்தொழில், காப்புறுதி மற்றும் ஏனைய நிதித்துறைகளை உருவாக்குவதற்குமான மறுசீரமைப்புகள் பற்றிய விதப்புரைகளையும் இந்தக் குழுவினால் முன்வைக்க முடியும்.

சர்வதேச பொருளாதார கொள்கை, வெளிநாட்டு நிதிச் சேவைகள் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் மற்றும் இலங்கையின் நாணய விவகாரங்கள், கடன் மற்றும் நிதிச் சேவைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீதான அவற்றின் விளைவுகள் பற்றி ஒரு விரிவான அடிப்படையில் கற்கையை மேற்கொள்வதற்கும் மீளாய்வு செய்வதற்கும் இக்குழுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஒதுக்கு முறைமை, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு வர்த்தக ஊக்குவிப்பு, ஏற்றுமதி கட்டுப்பாடுகள், இறக்குமதிக் கட்டுப்பாடுகள், வணிக, கைத்தொழில் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான நிதி உதவி, நிதி நடவடிக்கைமுறைகள், நிதி நிறுவனங்களின் செயலாற்றுகை மற்றும் முகாமைத்துவம், நாணயத் தாள்கள், நாணயக் குற்றிகள் மற்றும் நாணயம் ஆகியவற்றின் பகிர்ந்தளித்தல் மற்றும் மீட்பு, கடன் கொடுத்தல் மற்றும் அறவிடல் தொடர்பான விடயங்கள் ஆகியவை உள்ளடங்கலாக நாணயக் கொள்கையுடன் தொடர்பான விடயங்களை தொடர்ச்சியான ஓர்அடிப்படையில்  மீளாய்வு செய்வதற்கும்; மற்றும் நிதியியல் துறையின் உறுதிப்பாட்டையும் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்துவதற்கும்  விதப்புரைகளை ஏற்பாடு செய்வதை உள்ளிட்ட நாணயக் கொள்கை தொடர்பான விடயங்களை தொடர்ச்சியான அடிப்படையில் மீளாய்வு செய்வதற்கும், இலங்கையில் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதங்களை (Sri Lanka Inter Bank Offered Rate (SLIBOR)) நிர்ணயிக்கும் செயற்பாட்டின் போது ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் வணிகப் போட்டி தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்வதற்கும் பரிசீலனைகளை மேற்கொள்ளவும் முடியும்.

காப்புறுதி உள்ளடங்கலாக அரச நிதி நிறுவனங்கள் மற்றும் நிதிச் சேவைகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாக கூட்டிணைந்த ஆளுகை, செயலாற்றுகை மற்றும் முகாமைத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் அக்கறைகளின் முரண்பாடு ஆகியவற்றை மீளாய்வு செய்வது, காப்புறுதி உள்ளடங்கலாக நிதிக் கொள்கை மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கால அரசாங்கங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் பொறுப்புகளைப் பற்றி கொள்கை மீளாய்வுகளை மேற்கொள்வதற்கும், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் செயலாற்றுகை மற்றும் முகாமைத்துவம் மற்றும் மூலதனச் சந்தை முன்னேற்றங்கள் பற்றி பரிசீலிப்பதற்கும்  அறிக்கையிடுவதற்கும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் செயலாற்றுகை மற்றும் முகாமைத்துவம் பற்றி பரிசோதனை செய்வதற்கும் அறிக்கையிடுவதற்குமான வாய்ப்பும் இதற்குக் காணப்படுகிறது.

அரசுக்குச் சொந்தமான ஏதேனும் வங்கி அல்லது காப்புறுதி உட்பட நிதிச்சேவைகளை வழங்கும் ஏதேனும் வேறு நிறுவனம் அல்லது ஏதேனும் எழுத்திலான சட்டத்தின் கீழ் அரசாங்கத்துக்கு உரித்தாக்கப்பட்டுள்ள வேறு நிறுவனங்கள் பற்றிய கண்டறிதல்களையும் அத்துடன் அதிலிருந்து எழும் ஏதேனும் விடயத்தையும் குழு மூன்று மாதங்களுக்கொரு தடவை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுதல் வேண்டும். இவ்வறிக்கை பரிகார நடவடிக்கைகள் தேவைப்படும் விடயங்கள் மற்றும் ஏதேனும் விதப்புரைகள் இருப்பின் அவை பற்றிய அவதானிப்புக்களும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

குழுவின் அறிக்கையொன்று சபையில் சபாபீடத்தில் இடப்பட்டதும் அவ் அறிக்கை நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கும் உரிய நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கும் ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் அவர்கள் தம் அவதானிப்புகளையும் அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும் எட்டு வாரக் காலப்பகுதியினுள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்டுதல் வேணடும் என்பதுடன் குறித்த அவதானிப்புகள்  தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைமுறைகள் பற்றிய கூற்றொன்றை சமர்ப்பித்தல் அல்லது அச் சிபாரிசுகள்  நிறைவுசெய்யப்படலாகாது என்பது அமைச்சரின் கருத்தானால் அதற்கான காரணத்தை அமைச்சர் எழுத்தில் விளக்குதல் வேண்டும் என்பதுடன் அமைச்சர் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ள மாற்று நடவடிக்கையையும் சுட்டிக்காட்டுதல் வேண்டும்.

குழுவுக்குத் தேவைப்படின் நிலைப்பாட்டை நேரில் வந்து விளக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைப்பதுடன் அவ்வாறான விடயம் தொடர்பாக எழுகின்ற கேள்விகளுக்கு எட்டு வாரங்களினுள் பதிலளிக்குமாறும் கோரலாம்.

குழு தேவைக்கேற்றவாறு, ஏனைய நிறுவனங்களைப் பரிசீலிப்பதற்கு அதன்    உறுப்பினர்களைக் கொண்ட உப குழுக்களை நியமித்தல் வேண்டும். ஆயின், ஏனைய உறுப்பினர்கள் விரும்பினால் இவ்வாறான ஏதாவது குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். குழு அவசியமானது எனக் கருதும் அவ்வாறான விடயங்கள் தொடர்பில் அவ்வாறான உப குழுக்கள் குழுவிற்கு அறிக்கையிடுதல் வேண்டும்.

குழு அல்லது குழுவினால் நியமிக்கப்படும் உப குழு தேவைக்கேற்றவாறு குழுவினால் தீர்மானிக்கப்படும் சம்பந்தப்பட்ட ஏதாவது நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அமர்வுகளை நடாத்துதல் வேண்டும் என்பதுடன், குழுவின் உறுப்பினர்களாகவிராத பாராளுமன்றத்தின் வேறு உறுப்பினர்கள் அத்தகைய குழுவின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு தவிசாளரின் அனுமதியுடன் அனுமதிக்கப்படலாம்.

வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழு அல்லது அதன் உப குழு எதுவும் அதன் கடமைகளைப் புரிவதற்காக எவரேனுமாளை அதன் முன்னர் அழைத்து வினவுவதற்கும் ஏதேனும் பத்திரத்தை, புத்தகத்தை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைக் கோருவதற்கும், பரிசீலிப்பதற்கும் களஞ்சியங்கள், சொத்துக்கள் என்பனவற்றைப் பார்வையிடவும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.

  • பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு

 

பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு அமைச்சரவை அமைச்சர்கள் அல்லாத 16 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.

அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் செயலாற்றுகை, முகாமைத்துவம், தொழிற்பாட்டு வினைத்திறன், கொள்கைச் சட்டகம், சட்டச் சட்டகம் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றைப் பரிசீலித்தல், அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் நிதி உறுதிப்பாடு, கடன் முகாமைத்துவம், இலாபம் மற்றும் முதலீட்டு முகாமைத்துவம் ஆகியவற்றைப் பரிசீலித்தல் என்பன இதன் பணிகளாக இருக்கும்.

சொத்துக்களின் உரிமை நீக்கத்துக்கான தேவைப்பாடுகளையும் அரச – தனியார் பங்குடைமைகளுக்கான வாய்ப்புகளையும் இழப்புகளைக் குறைத்து அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் இலாபங்களை அதிகரிப்பதற்கான உபாயமார்க்கங்களையும் பரிசீலிக்கும்.

அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளால் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பான மனித வள முகாமைத்துவம், மிகை அல்லது தேவைக்கு மேற்பட்ட பணியாளர் குறைப்பு, ஊதியங்கள் மற்றும் நியதிச்சட்டக் கொடுப்பனவு நிலுவைகளை செலுத்தாதிருத்தல் மற்றும் ஊதியங்கள் மற்றும் படிகளை மேலதிகமாகச் செலுத்துதல் ஆகியவற்றை இக்குழுவினால் பரிசீலிக்க முடியும்.

1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தினாலும் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தினாலும் ஆளுகை செய்யப்படும் அரசுக்குச் சொந்தமான ஏதேனும் தொழில்முயற்சிகள் பற்றிய கண்டறிதல்களைக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுதல் வேண்டும்.

இக்குழுவின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதும் அது நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கும் உரிய நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கும் ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் அவர்கள் தம் அவதானிப்புகளையும் அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும் எட்டு வாரக் காலப்பகுதியினுள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்டுதல் வேண்டும், என்பதுடன் குறித்த அவதானிப்புகள்  தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைமுறைகள் பற்றிய கூற்றொன்றை சமர்ப்பித்தல் அல்லது அச் சிபாரிசுகள்  நிறைவுசெய்யப்படலாகாது என்பது அமைச்சரின் கருத்தானால் அதற்கான காரணத்தை அமைச்சர் எழுத்தில் விளக்குதல் வேண்டும் என்பதுடன் அமைச்சர் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ள மாற்று நடவடிக்கையையும் சுட்டிக்காட்டுதல் வேண்டும் என்பதுடன் அமைச்சர் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ள மாற்று நடவடிக்கையையும் சுட்டிக்காட்டுதல் வேண்டும். குழுவுக்குத் தேவைப்படின் நிலைப்பாட்டை நேரில் வந்து விளக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைப்பதுடன் அவ்வாறான விடயம் தொடர்பாக எழுகின்ற கேள்விகளுக்கு எட்டு வாரங்களினுள் பதிலளிக்குமாறும் கோரலாம்.

குழு தேவைக்கேற்றவாறு, ஏனைய நிறுவனங்களைப் பரிசீலிப்பதற்கு அதன்    உறுப்பினர்களைக் கொண்ட உப குழுக்களை நியமித்தல் வேண்டும். ஆயின், ஏனைய உறுப்பினர்கள் விரும்பினால் இவ்வாறான ஏதாவது குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். குழு அவசியமானது எனக் கருதும் அவ்வாறான விடயங்கள் தொடர்பில் அவ்வாறான உப குழுக்கள் குழுவிற்கு அறிக்கையிடுதல் வேண்டும்.

குழு அல்லது குழுவினால் நியமிக்கப்படும் உப குழு தேவைக்கேற்றவாறு குழுவினால் தீர்மானிக்கப்படும் சம்பந்தப்பட்ட ஏதாவது நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அமர்வுகளை நடாத்துதல் வேண்டும்.

குழுவின் உறுப்பினர்களாகவிராத பாராளுமன்றத்தின் வேறு உறுப்பினர்கள் அத்தகைய குழுவின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு தவிசாளரின் அனுமதியுடன் அனுமதிக்கப்படலாம்.

பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு அல்லது அதன் உப குழு எதுவும் அதன் கடமைகளைப் புரிவதற்காக எவரேனுமாளை அதன் முன்னர் அழைத்து வினவுவதற்கும் ஏதேனும் பத்திரத்தை, புத்தகத்தை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைக் கோருவதற்கும், பரிசீலிப்பதற்கும் களஞ்சியங்கள், சொத்துக்கள் என்பனவற்றைப் பார்வையிடவும் அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.

பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் கூட்ட நடப்பெண் ஐந்து உறுப்பினர்களாதல் வேண்டும். குழுவினால் ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான காரணமின்றி அக்குழுவின் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களிற்கு வருகைதராதுள்ள எவரேனும் உறுப்பினர், அத்தகைய குழுவின் உறுப்பாண்மையை இழந்துள்ளாரெனக் கருதப்படுதல் வேண்டும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.