புதுச்சேரி: புதுச்சேரி அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் தாமதமாக வருவதாக தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, தலைமைச் செயலக ஆய்வுக் குழு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டதில் அலுவலகங்களில் பாதி பேர் உரிய நேரத்திறகு வராமல் இருந்தது தெரியவந்தது.
புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர். ஆனால், இதுவரை இதுகுறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, காலையில் அரசு அலுவலகங்களுக்கு சென்று விடியோ எடுத்து பதிவிடத் தொடங்கினார். அவ்வீடியோ இணைப்பு அனைவருக்கும் அனுப்பப்பட்டது.
அதைப்பார்த்த சட்டபேரவை தலைவர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மாவிடம் தெரிவித்தார். இதை கண்காணிக்க, நிர்வாக சீர்திருத்த துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, தலைமைச் செயலாளர் ராஜீவ் சர்மா உத்தரவிட்டார். இதன் பேரில் நிர்வாக சீர்திருத்த துறையின் கண்காணிப்பாளர் கலியபெருமாள் தலைமையில் 10 பேர் குழுவினர் இன்று காலை திடீரென பாக்குமுடையான்பட்டு பகுதியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறைக்கு வந்தனர்.
இக்குழுவினர் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் ஆய்வின்போது, 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து அங்கு பணியாளர்கள் வருகை பதிவேட்டை பார்வையிட்ட ஆய்வு குழு அதிகாரிகள் அதனை எடுத்துச் சென்றனர், அதிகாரிகள் சென்ற சிறிது நேரத்தில் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்து வழக்கம் போல் தங்கள் பணியினை தொடர்ந்தனர். பணியாளர்கள் வருகை தொடர்பாக இந்த குழு, தலைமை செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இதன் பிறகு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று ஆய்வு குழு தரப்பில் குறிப்பிட்டனர்.