மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு: மீண்டும் கோரிக்கை வைத்த ராமதாஸ்

தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று

நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும், மக்கள் தொகை அடிப்படியில் ஒவ்வொரு சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு பிரித்து வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இடஒதுக்கீடு தொடர்பாக அவ்வப்போது எழும் விவாதங்களில் பாமக இந்த கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

சத்தீஸ்கரில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக 81% ஆக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் மீண்டும் மக்கள் தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீடு கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (நவம்பர் 21) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக 81% ஆக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க முன்னுதாரணம் ஆகும்.

ஓபிசி ஒதுக்கீடு 14%-லிருந்து 27% ஆகவும், பழங்குடியினர் ஒதுக்கீடு 20%-லிருந்து 32% ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. பட்டியலினத்தவருக்கு 12% இட ஒதுக்கீடு வழங்கப்படும். இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ள நிலையில் இது சாத்தியமாகக்கூடும்.

அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாமக-வின் நிலைப்பாடு. இது தான் தந்தை பெரியாரின் கொள்கை. இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.