முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள முதலீட்டுப் பொதிகள் போதுமானதாக இல்லை என்றும், மத்திய வங்கி மற்றும் திறைசேரி என்பவற்றுக்கு உண்மைகளைத் தெளிவுபடுத்தி முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் புதிய பொதியொன்றைத் தயாரிக்க வேண்டும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு முதலீட்டுச் சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் அண்மையில் (15) நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும்போது அது தொடர்பில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும் என்பதால், மேலே குறிப்பிடப்பட்ட விடயத்தை இலங்கை மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் தெளிவான முறையில் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் தற்பொழுது நடைமுறையில் உள்ள பொதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள், எந்தளவு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன மற்றும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் முதலீட்டுச் சபைக்கு அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், முதலீட்டாளர்களுக்கு வழங்கக்கூடிய சலுசைகள் குறைந்த அளவில் காணப்படுவதாகவும், வரிச் சலுகைகள் நீக்கப்பட்டதால் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் முதலீட்டுச் சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
முதலீட்டுக்காக வெளிநாட்டவர்கள் காணிகளைக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டதில் இராஜாங்க அமைச்சர்களான டயானா கமகே, பிரசன்ன ரணவீர, ஜானக வக்கும்புற, அரவிந்த குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மிலான் ஜயதிலக மற்றும் குணதிலக ராஜபக்ஷ ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.