மோடியே சொன்னாலும் ஓபிஎஸ்சுக்கு இனிமே இங்க இடமில்லை… இபிஎஸ் ஆதரவாளர் தில் பேச்சு!

ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கியவர்:
இபிஎஸ் ஆதரவாளரும், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுகவின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டவருமான ஆதி ராஜாராம், டைம்ஸ் ஆஃப் இந்தியா -சமயம் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ஓபிஎஸ். டிடிவி, சசிகலா, பாஜக உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் தன் பேட்டியில் கூறியதன் முக்கிய அம்சங்கள்:

ஓபிஎஸ் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. தர்ம யுத்தம் நடத்தியபோது சசிகலாவை கொலைக்காரி என்றும், டிடிவி தினகரனை தற்பெருமை பேசுபவர் என்று கடுமையாக விமர்சித்து வந்தார். அப்படியெல்லாம் பேசிய வந்த ஓபிஎஸ் தான் இன்று சசிகலா, டிடிவி தினகரனின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழக அரசியலில் நம்பர் ஒன்; சந்தர்ப்பவாதி, தீயசக்திகள் யார் என்றால் அது ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தான்.

மோடியே சொன்னாலும்:
யார் சொன்னாலும் ஒருபோதும் இனி ஓபிஎஸ் உடன் சேரமாட்டோம். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என்றெல்லாம் எடப்பாடியாரிடம் மோடி சொல்லமாட்டார். சொவ்லவும் முடியாது. ஓபிஎஸ் போன்றவர்களிடம் வேண்டுமானால் சொல்லலாம். அப்படியே அவர் சொன்னாலும் ஓபிஎஸ்சுக்கு இனி அதிமுகவில் இடமில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மோடியோ, பாஜகவோ எப்படி அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியும்?

பாஜகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் எப்படி தலையிடுவது இல்லையோ, அதேபோன்று அதிமுக உட்கட்சி விஷயத்தில் அவர்கள் தலையிடாமல் இருப்பதுதான் அரசியல் நாகரிகம். பாஜகவில் அத்வானி போன்றவர்கள் ஓரங்கட்டப்பட்டதை பற்றியெல்லாம் நாங்கள் பேசுகிறோமா என்ன?

சிறு துளி பெருவெள்ளம்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைவது நிச்சயம். இந்த கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பச்சைமுத்துவின் இநதிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகளுக்கும் இடம் உண்டு.

சிறு துளி பெரு வெள்ளம் என்பதன் அடிப்படையில், இபிஎஸ் தலைமையை நம்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மதித்து, அரவணைத்து செல்கிறோம். ஆனால், ஓபிஎஸ். டிடிவி, சசிகலா போன்றவர்கள் சிறுதுளி கிடையாது. சிறுதுளி விஷத்தை போன்றவர்கள். அதிமுக கூட்டணி அமைக்கும் என்றால் மட்டும் கேள்விகள் எழுகின்றன. ஆனால் திமுக கூட்டணி அமைக்காமல் எப்போதும் போட்டியிடுவதே இல்லை. அதைப் பற்றி இங்கும் யாரும் கேள்வி கேட்பதில்லை.

அதிமுக தலைமை விவகாரத்தில் எங்களை பொறுத்தவரை கட்சித் தொண்டர்களின் எண்ணம்தான் பெரிது. இதில் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தி்ன் முடிவு எப்படி இருந்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கட்சித் தொண்டர்களின் எண்ணங்களுக்கு வலிமை உண்டு.

அண்ணாமலை பற்றி:
பாஜக எங்களின் கூட்டணி கட்சி அவ்வளவுதான். அவர்களை கண்டு அஞ்சவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எங்கள் அளவுக்கு இல்லை. இதற்கு மேல் அவரை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இபிஎஸ் ஸ்டாலின் போல் அல்ல:
ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது சின்ன, சின்ன பிரச்னைகளையெல்லாம் ஊதி பெரிதாக்கி 30 ஆயிரம் போராட்டங்களை நடத்தினார். அதுபோல அதிமுக ஒருபோதும் செய்யாது. அதற்காக அதிமுகவை ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று சொல்வது தவறு. எதிர்க்கட்சி என்றாலே தினமும் கத்திச் சண்டை போட வேண்டும் என்றில்லை.

தற்போதைய அரசியல் நிகழ்வுகள் எல்லாம் எங்களுக்கு சாதகமாகவே உள்ளன. எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான எழுச்சியை 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு பார்க்கதான் போகிறது என்றார் ஆதி ராஜாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.