புதுடெல்லி: குஜராத்தில் மோர்பி நகரில் நடந்த தொங்கு பால விபத்து ஒரு பெருந்துயரம் என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 30-ஆம் தேதி குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் ஒன்று அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 குழந்தைகள் உள்பட 141 உயிரிழந்தனர். அண்மைக்காலத்தில் நாட்டின் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று கூறும்போது, “மோர்பி பால விபத்து ஒரு பெருந்துயரம். இந்தச் சம்பவத்தை குஜராத் உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வைத்து விசாரித்து உரிய விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இந்த விபத்துக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன்னிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்தப் பால விபத்து வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தையே நாடலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் இந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம், மோர்பி நகராட்சி நிர்வாகம், சுவர்க் கடிகார தயாரிப்பு நிறுவனத்திற்கு 100 ஆண்டு கால பழமையான பால மறுசீரமைப்புப் பணியை எப்படிக் கொடுத்தது என்று வினவியிருந்தது. மோர்பி பால விபத்து ஒப்பந்தம் பெற்ற ஓரிவா குழுமம் அஜந்தா க்ளாக்ஸ் என்ற சுவர்க்கடிகாரம் தயாரிக்கும் பிரபல நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது எப்படி? அவர்கள் பணியை ஒழுங்காக மேற்கொள்வது பற்றி ஆய்வு செய்யப்பட்டதா? பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அனுமதியளிக்கப்பட்டதா? அப்படியென்றால் எதன் அடிப்படையில் பாலத்தை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டது என பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.