வடபழனி முருகன் கோவிலின் தங்கத்தேர் புதுப்பிக்கப்பட்டு தேர் பவனி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. தங்கத்தேர் உலாவை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அவருடன் திமுக எம்எல்ஏ வேலு, அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், துணை ஆணையர் முல்லை உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தமிழக கோவில்களில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் மரத்தால் ஆன தேர்கள் மீண்டும் பவனி வருவதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன்படி திருச்சி சமயபுரம், திருத்தணி முருகன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆகிய கோயில்களில் நீண்ட காலமாக ஓடாமல் இருந்த தேர்தல் சீரமைக்கப்பட்டு பவனி வருகின்றன.
கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் புதிய தேர் உருவாக்கவும் பழைய தேர்களை சீரமைக்கவும் ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டது. அதேபோன்று இந்த நிதியாண்டில் ஒன்பது புதிய தேர்தல் செய்யவும் நான்கு பழைய தேர்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காசியில் நடந்து வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காகவும் காசி யாத்திரைக்காகவும் 50 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோர் காசி புனித யாத்திரை செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக வடபழனி முருகன் கோவிலில் தேர் பவனி நடத்தப்படாமல் இருந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தேர் புதுப்பிக்கும் பணி முடிந்து பவனி மீண்டும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது” என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.