விமான பயணிகளுக்கு ஏர் சுவிதா படிவம் இனி தேவையில்லை

புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் இனி ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தியது மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான சுய அறிவிப்பு படிவமான ‘ஏர் சுவிதா’ தளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்த படிவத்தில் நிரப்பும் அனைத்து தகவல்களுக்கான ஆவணங்களை பயணிகள் வைத்திருக்க வேண்டும். இது வெளிநாட்டில் இருந்து இந்திய வருபவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து விட்ட நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான ‘ஏர் சுவிதா’ நடைமுறை தேவையில்லை என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. தேவைப்படும் பட்சத்தில் இந்த நடைமுறை மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.