புதுடில்லி ‘மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை நிர்ணயிப்பது தொடர்பாக, ௧௪ மாநிலங்கள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளன. மீதமுள்ள ௧௯ மாநிலங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் அடிப்படையில் சிறுபான்மையினரை நிர்ணயிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
‘நாடு முழுதும், ௧௦க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால், அங்கு பெரும்பான்மையினராக உள்ளவர்கள் சலுகைகளை அனுபவிக்கின்றனர்’ என, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, சிறுபான்மையினர் அந்தஸ்து அளிப்பது தொடர்பாக அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அடுத்து தாக்கல் செய்த மற்றொரு பதில் மனுவில், ‘மாநில அரசுகளின் கருத்துக்கள் கேட்டு, சிறுபான்மையினர் அந்தஸ்து தொடர்பாக மத்திய அரசே முடிவு செய்ய முடியும்’ என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ். ஓக்லா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்தப் பிரச்னை தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், பல்வேறு துறைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுவரை, பஞ்சாப், மிசோரம், மணிப்பூர், ஒடிசா, உத்தரகண்ட், குஜராத், தமிழகம், மேற்கு வங்கம் உட்பட, ௧௪ மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் மட்டுமே தங்களுடைய நிலை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளன.
இது மிகவும் சிக்கலான மற்றும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்னை என்பதால், மீதமுள்ள 19 மாநிலங்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக, மீதமுள்ள, ௧௯ மாநிலங்கள், நான்கு வாரங்களுக்குள் தங்களுடைய நிலையை தெரிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில், மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் தன் நிலையை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்