நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை தோறும் கொங்கன் ரயில்வே வழியாக மும்பை தாதருக்கு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் அந்த ரயிலின் பின்பகுதியில் இரு காலிப் பெட்டிகள் சேர்க்கப்பட்டன. அந்தப் பெட்டிகளில் உள்ள குறைகளைச் சரிபார்த்து பராமரிப்பு செய்வதற்காக அவை அனுப்பப்பட்டன.
அந்தப் பெட்டிகள் பராமரிப்புக்காக அனுப்பப்பட்டதால் அவற்றை ரயில்வே ஊழியர்கள் பூட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில், அந்த ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய சரவண அருணாச்சலம் என்ற பயணி தாமதமாக ரயில் நிலையம் வந்துள்ளார். அவர் நடைமேடை உள்ளே நுழைந்ததும் அவர் பயணிக்க வேண்டிய ரயில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது.
மும்பை செல்ல வேண்டிய சரவண அருணாசலம், என்ன செய்வது என்பது புரியாமல் ஓடும் ரயிலின் பின்புறம் ஓடியிருக்கிறார். ரயிலின் கடைசிப் பெட்டியை எட்டிப் பிடித்த அவர் வாசலில் கைப்பிடியைப் பிடித்துத் தொங்கியதும் ரயில் வேகம் எடுத்துவிட்டது. அப்போது தான் அந்த பெட்டி பூட்டப்பட்டு இருப்பதை சரவண அருணாசலம் கவனித்து பதறியுள்ளார்.

ஆனாலும், அவரால் இறங்கவோ உள்ளே செல்லவோ முடியாமல் தவித்தபடியே தொங்கியுள்ளார். நெல்லை ரயில் நிலையத்தின் நடைமேடை இறுதிப் பகுதியில் நின்றபடியே, ஓடும் ரயிலில் ஏதும் குறைபாடு இருக்கிறதா என கண்காணிக்கும் ரயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்களான ஞானசேகரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பார்த்து விட்டனர்.
மும்பை விரைவு ரயில் அடுத்ததாக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தான் நிற்கும். அதற்கு 65 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். அந்தப் பயணியால் அவ்வளவு தூரம் வாசலில் தொங்கியபடி பயணிப்பது ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்த பராமரிப்பு பணியாளர்கள் இருவரும் உடனடியாக நிலைய அதிகாரிக்கும் தங்களின் மேற்பர்வையாளருக்கும் செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

துரிதமாகச் செயல்பட்ட பராமரிப்பு மேற்பார்வையாளர் பாலமுருகன், ரயிலின் ஓட்டுநர் மற்றும் ரயில்நிலைய மேலாளரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். உடனடியாக ரயிலை நிறுத்தாவிட்டால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணி எந்த நேரத்திலும் கீழே விழும் வாய்ப்பு இருப்பதைத் தெரிவித்துள்ளார். அதற்குள் அந்த ரயில் 14 கி.மீ தூரம் சென்றுவிட்டது. இருப்பினும் பயணிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை கவனத்தில் கொண்டு, ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் பயணி சரவண அருணாசலத்தை கீழே இறக்கி ஓடும் ரயிலில் ஏறுவது ஆபத்தானது என அறிவுரை கூறி அவரின் பெட்டியில் அமரச் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் உடனடியாகச் செயல்பட்ட நெல்லை ரயில் நிலையத்தின் ரயில்பெட்டி பராமரிப்பு மேற்பார்வையாளர் பாலமுருகன், ஊழியர்கள் ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு சக ஊழியர்களும் அதிகாரிகளும் பாராட்டுத் தெரிவித்தனர். அவர்களை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கினார்.