பாரிஸ், ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள ஏரியில் மீனவரின் துாண்டிலில், 30 கிலோ எடையுடைய, ‘கோல்டன் பிஷ்’ எனப்படும், பிரமாண்ட தங்க நிற மீன் சிக்கியது.
பிரான்சின் ஷாம்பெயின் நகரில் உள்ள ப்ளூ வாட்டர் என்ற ஏரி, மீன்பிடித்தலுக்கு பிரபலமானது. பல விதமான மீன்களை பிடிப்பதை பொழுது போக்காக வைத்துள்ள மீனவர்கள் இந்த ஏரிக்கு வந்து மீன்பிடிப்பது வழக்கம்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆன்டி ஹாக்கெட், 42, என்ற மீனவர், சமீபத்தில் இந்த ஏரிக்கு வந்து துாண்டில் போட்டு மீன் பிடித்தார். அப்போது அவரது துாண்டிலில் பிரமாண்டமான, ‘கோல்டன் பிஷ்’ சிக்கியது.
வழக்கமாக இதுபோன்ற கோல்டன் பிஷ், அளவில் சிறியதாகவே இருக்கும். ஆனால் இந்த மீன், 30.5 கிலோ எடையிருந்தது. இந்த மீனுக்கு, ‘தி கேரட்’ என, அவர் பெயர் சூட்டியுள்ளார்.
இது குறித்து ஆன்டி ஹாக்கெட் கூறியதாவது:
இந்த மீன், சிறிய குட்டியாக இருக்கும்போது 15 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் விடப்பட்டதாக ஏற்கனவே ஒரு தகவல் உண்டு. ஆனால் அந்த மீன், என் துாண்டிலில் சிக்கும் என கனவில் கூட நினைத்தது இல்லை. இது, உலகின் மிகப் பெரிய தங்க நிற மீனாக இருக்கும் என தெரிகிறது.
துாண்டிலில் சிக்கியதுமே, இது ஒரு பெரிய மீன் என தெரிந்து விட்டது. அதை பிடித்து மேலே துாக்குவதற்கு 25 நிமிடங்களானது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து உடனடியாக எதுவும் என்னால் தெரிவிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement