‘ஆடியோ விவகாரம் தெரிந்தும் மறைத்தார்’ – அண்ணாமலை மீது எஃப்ஐஆர் பதியக் கோரி மதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார்

மதுரை: பாஜக மாநில நிர்வாகியின் ஆடியோ விவகாரத்தில் குற்றத்தை மறைத்த அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவிடக் கோரி மதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

மதுரை கேகே நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். இவர், மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர், ”கடந்த 2 தினத்திற்கு முன்பு சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பாஜக தமிழக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா என்பவர் அக்கட்சியின் சிறுபான்மை அணி தலைவர் டெய்சி சரணை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியானது. சூர்யா சிவா டெய்சி சரணை, சங்கை அறுத்து சம்பவம் செய்திடுவேன். எனது சாதிக்காரனை ஏவி விட்டு கொன்று விடுவேன். நாங்கள் 68% இருக்கிறோம் உள்ளிட்ட ஆபாச வார்த்தைகளால் மிரட்டியுள்ளார்.

மேலும், அக்கட்சி மாநில அமைப்புச் செயலர் கேசவ விநாயகம், அண்ணாமலை, ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்களையும் தொடர்புப்படுத்தி பேசி இருக்கிறார். மேற்படி ஆடியோவின் பிரதியை இப்புகாருடன் இணைத்துள்ளேன். இது பற்றி டெய்சி சரண் ஊடகத்தில் கூறும்போது, ”ஏற்கெனவே 15 நாளுக்கு முன்பே, இக்கொலை மிரட்டல் ஆடியோ பற்றி மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கூறியும், அவர் உரிய நடவடிக் கை எடுக்கவில்லை. நான் பார்த்துக் கொகள்கிறேன்” என, அவர் கடந்து சென்றிருக்கிறார். சூர்யா சிவா மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்படி தண்டனைக்குரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓபிசி சமூகத்தை, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மீது ஏவி விடுவேன் என்பது சமூகத்தின் இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுவதுடன், பொது அமைதியை சீர்குலைக்க வன்முறையைத் தூண்டியிருக்கிறார். அவர் பெண்களை கேவலமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்ற சம்பவத்திற்கு புகார் கொடுக்காதது மற்றும் கொடுக்கச் சொல்லாதது, தெரிந்தே குற்றத்தை மறைக்கும், குற்றச் செயல். அவர் குற்றம் இழைத்துள்ளார்.

பாஜகவில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடருகிறது. குறிப்பாக கே.டி.ராகவன் பிரச்சனை, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது பொது இடத்தில் பாலியல் வன்முறை நடந்துள்ளது. பதவி கொடுப்பதற்காக பாஜக சிறுபான்மை பிரிவு பெண்ணை பாலியல் ரீதியாக கேசவ விநாயகம் பயன்படுத்தினார் போன்ற குற்றச்சாட்டு சமூகத்திற்கே எதிரானது. இக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட சூர்யா சிவாவின் குற்றத்தை தெரிந்தே மறைத்த அண்ணாமலை மற்றும் சூரியா சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.