குழந்தைகளுக்கு எதிரான ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் நீக்கம் – புதிய தலைவர் எலான் மஸ்க் நடவடிக்கை

கலிபோர்னியா: ட்விட்டரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் செயல்பாடுகளுக்கென்று சில ஹேஷ்டேக்குகள் புழக்கத்தில் உள்ளன. இவை குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு விற்றல், குழந்தைகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்துப் பதிவிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ட்விட்டரிலிருந்து இத்தகைய ஹேஷ்டேக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலுக்கு எதிராக போராடி வரும் எலிசா ப்ளூ கூறுகையில், “குழந்தைகள் மீதான பாலியல் செயல்பாடுகளுக்கென்று ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் புழக்கத்தில் உள்ளன. இதை நீக்கச் சொல்லி பல ஆண்டுகளாக ட்விட்டரிடம் முறையிட்டு வந்தோம். ஆனால், முந்தைய ட்விட்டர் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மாறாக, பல முறை பாலியல் உள்ளடக்கங்களை நீக்க ட்விட்டர் மறுத்துள்ளது. இந்தச் சூழலில் ட்விட்டருக்கு புதிதாக தலைமையேற்றுள்ள எலான் மஸ்க், இந்த ஹேஷ்டேக்குகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். தவிர, இத்தகைய அத்துமீறலுக்கு எதிராக புகார் அளிப்பதற்கென்று தனி வசதியையும் ஏற்படுத்தியுள்ளார். இது மிகப் பெரிய விஷயம்” என்றார்.

ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளைக் குறிக்கும் வகையில் ப்ளூ டிக் குறியீடு வழங்கப்படுகிறது. எலான் மஸ்க் ட்விட்டருக்கு பொறுப்பேற்றதையடுத்து ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு பயனாளர்கள் மாதம் 8 டாலர் (ரூ.660) சந்தா கட்ட வேண்டும் என்று அறிவித்தார்.

இதையடுத்து போலி ப்ளூ டிக் கணக்குகள் அதிகரிக்கத் தொடங்கின. இது பெரும் சவாலாக உருவெடுத்தது.

இந்நிலையில், “போலி கணக்குகளை அடையாளம் காணும் பணியில் இறங்கி இருக்கிறோம். அதுவரையில் தற்காலிகமாக ப்ளூ டிக் திட்டத்தை மீண்டும் நிறுத்தி வைக்கிறோம். நிறுவனங்களையும் தனிநபர்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் வெவ்வேறு வண்ணங்களில் டிக் குறியீடு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.