கோவை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சார்ஜாவில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. மேலும் இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு வாலிபரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில், அவரது பையில் 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வாலிபரை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்த போது, வாலிபர் வர மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தனது கையில் வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் வீசாவையும் கிழித்து வீசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை கைது செய்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டியை சேர்ந்த முகமது சாலிக் (39) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால்தான் அவர் பயத்தில் பாஸ்போர்ட்டை கிழித்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.